ரஜினியின் ஜெயிலர் படம் ரிலீசாகும் முன்பே... அடுத்த படத்துக்காக முன்னணி நடிகரை ஸ்கெட்ச் போட்டு தூக்கிய நெல்சன்
நடிகர் ரஜினிகாந்தின் ஜெயிலர் திரைப்படத்தை இயக்கி முடித்துள்ள நெல்சன் அடுத்ததாக பிரபல நடிகருடன் கூட்டணி அமைக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் நெல்சன். கடந்த 2018-ம் ஆண்டு ரிலீஸ் ஆன இப்படம் பிளாக்பஸ்டர் ஹிட் ஆனது. கோலமாவு கோகிலா படத்தின் வெற்றிக்கு பின்னர் தனது நண்பன் சிவகார்த்திகேயன் உடன் கூட்டணி அமைத்தார் நெல்சன். இவர் கூட்டணியில் வெளியான டாக்டர் படம் பிரம்மாண்ட வெற்றியை ருசித்ததோடு பாக்ஸ் ஆபிஸில் ரூ.100 கோடிக்கு மேல் வசூலையும் வாரிக்குவித்தது.
டாக்டர் படத்தின் வெற்றிக்கு பின்னர் நெல்சனுக்கு கிடைத்த ஜாக்பாட் வாய்ப்பு தான் விஜய்யின் பீஸ்ட். இப்படம் கடந்தாண்டு ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டுக்கு மிகப்பெரிய எதிர்பார்ப்புடன் ரிலீஸ் ஆனது. ஆனால் இப்படம் ரசிகர்களை பெரியளவில் கவராவிட்டாலும் பாக்ஸ் ஆபிஸில் ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்து சாதனை படைத்தது. பீஸ்ட் படத்துக்கு பின்னர் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் உடன் கூட்டணி அமைத்தார் இயக்குனர் நெல்சன்.
இதையும் படியுங்கள்... கடன் வாங்கி தானம் பண்ண மனுஷன் அவரு... மயில்சாமி, மனோபாலா நினைவேந்தல் நிகழ்ச்சியில் உருக்கமாக பேசிய கார்த்தி
இவர்கள் கூட்டணியில் தற்போது உருவாகி உள்ள திரைப்படம் தான் ஜெயிலர். சன் பிக்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்துள்ள இப்படத்தில் ரஜினியுடன் ரம்யா கிருஷ்ணன், சுனில், ஷிவ ராஜ்குமார், மோகன்லால், ஜாக்கி ஷெராப் என மிகப்பெரிய நட்சத்திய பட்டாளமே நடித்துள்ளது. ஜெயிலர் படத்தின் ஷூட்டிங் முடிந்து தற்போது பின்னணி பணிகள் படு ஜோராக நடைபெற்று வருகின்றன. இப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 10-ந் தேதி ரிலீஸ் ஆக உள்ளது.
இந்நிலையில், ஜெயிலர் படத்தின் ரிலீசுக்கு முன்பே தன் அடுத்த பட ஹீரோவாக லாக் செய்துவிட்டாராம் நெல்சன். அதன்படி நெல்சன் இயக்க உள்ள அடுத்த படத்தில் தனுஷ் தான் நாயகனாக நடிக்க உள்ளாராம். தற்போது அருண் மாதேஸ்வரன் இயக்கும் கேப்டன் மில்லர் படத்தில் நடித்து வரும் தனுஷ், அப்படத்தை முடித்த பின்னர் நெல்சன் உடன் கூட்டணி அமைப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது. தனுஷ் பிறந்தநாள் அன்று இதற்கான அறிவிப்பு வெளியாகவும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
இதையும் படியுங்கள்... ஓடிடியிலும் ஓஹோன்னு ஓடிய தி லெஜண்ட்... அஜித், விஜய் படங்களுக்கு நிகராக லாபம் பார்த்த அண்ணாச்சி படம்..!