இரண்டாம் திருமணம் செய்த ஹீரோவுக்கு ஜோடியாகும் அதிதி ஷங்கர்..! அது இந்த படத்தின் இரண்டாம் பாகமா?
நடிகை அதிதி ஷங்கர், இரண்டாம் திருமணம் செய்து கொண்ட நடிகர் விஷ்ணு விஷாலுக்கு ஜோடியாக நடிக்க உள்ள தகவல் தற்போது வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட படைப்புகளை இயக்கி, வெற்றி கண்டவர் இயக்குனர் ஷங்கர். இவருடைய மகள் அதிதி ஷங்கர், யாரும் எதிர்பாராத விதமாக.. கடந்த ஆண்டு இயக்குனர் முத்தையா இயக்கத்தில், சூர்யா தயாரிப்பில், கார்த்தி ஹீரோவாக நடித்த 'விருமன்' படத்தின் மூலம் ஹீரோயினாக அறிமுகமாகி ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
எம்பிபிஎஸ் படித்துவிட்டு மருத்துவத்துறையில் கவனம் செலுத்தாமல், சிறுவயதில் இருந்தே நடிகையாக வேண்டும் என்பது தன்னுடைய ஆசை என்பதால்... பெற்றோரிடம் தன்னுடைய ஆசை குறித்து எடுத்து கூறி, பின்னர், அவர்களின் சம்மதத்துடன் திரையுலகின் பக்கம் கவனம் செலுத்த துவங்கினார். இவர் நடித்த முதல் படமே சூப்பர் ஹிட் வெற்றி பெற்றதோடு, அதிதியின் நடிப்புக்கு மட்டும் இன்றி, ஆட்டம், பாட்டம், என அனைத்து திறமைகளையும் வெளிக்காட்டி ரசிகர்கள் கவனத்தை ஈர்த்தார்.
இதைத்தொடர்ந்து, அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் அதிதி ஷங்கர், தற்போது நடிகர் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக மாவீரன் படத்திலும், மறைந்த நடிகர் முரளியின் இரண்டாவது மகன் ஆகாஷ் முரளி ஹீரோவாக அறிமுகமாகும் படத்திலும், ஹீரோயினாக நடித்த ஒப்பந்தமாகியுள்ளார். இதைத்தொடர்ந்து, பிரபல நடிகரின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் அதிதி ஷங்கர் ஹீரோயினாக நடித்த ஒப்பந்தமாகியுள்ளார்.
இப்படம் குறித்து வெளியாகியுள்ள தகவலில், நடிகர் விஷ்ணு விஷால் இயக்குனர் ராம்குமார் இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் தான் அதிதி சங்கர் ஹீரோயினாக நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. விஷ்ணு விஷால் ஏற்கனவே ராம்குமார் இயக்கத்தில், முண்டாசுப்பட்டி மற்றும் ராட்சசன் ஆகிய இரண்டு படங்களில் நடித்துள்ளார். மேலும் தற்போது மூன்றாவது முறையாக அவர் இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தமாக உள்ள திரைப்படம், முண்டாசுப்பட்டி படத்தின் இரண்டாம் பாகமாக இருக்கலாம் என கூறப்படுவதால் இப்படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு, மே முதல் வாரத்தில் இருந்து நடைபெற உள்ளதாகவும், அதற்கான ஆரம்பகட்ட பணிகள் தற்போது தொடங்கி விட்டதாகவும் கூறப்படுகிறது. ஒரே ஒரு வெற்றி படத்தை கொடுத்த அதிதிக்கு தற்போது பட வாய்ப்புகள்... பிச்சிகிட்டு கொட்டுகிறது என இளம் நடிகைகள் பலரும் இவரை பார்த்து பொறாமையில் பொசுங்குவதாக ஒரு பேச்சு அடிபட்டு வருகிறது.