நடிகை மனோரமாவின் மகன் காலமானார் - யார் இந்த பூபதி? இத்தனை படங்களில் நடித்திருக்கிறாரா?
தமிழ் திரையுலகில் கோலோச்சிய நடிகைகளில் ஆச்சி மனோரமாவும் ஒருவர், அவரது ஒரே மகனான பூபதி இன்று மூச்சுத் திணறல் காரணமாக மரணமடைந்திருக்கிறார். அவருக்கு வயது 70.

Manorama Son Passes Away
தமிழ் சினிமாவிற்கு கிடைத்த ஒரு பொக்கிஷம் என்றே மனோரமாவை சொல்லலாம். காமெடி வேடங்களாக இருந்தாலும் சரி, குணச்சித்திர வேடமாக இருந்தாலும் சரி பின்னிபெடலெடுத்துவிடுவார். அவர் கடந்த 2015-ம் ஆண்டு காலமானார். அவரின் இழப்பு தமிழ் சினிமாவிற்கு ஒரு பேரிழப்பு. அவர் மறைந்தாலும் அவர் நடித்த படங்கள் இன்றளவும் மக்கள் மனதில் நீங்கா இடம்பிடித்து உள்ளன.
நடிகை மனோரமாவுக்கு ஒரே ஒரு மகன் இருந்தார். அவர் பெயர் பூபதி. அவரும் சினிமாவில் நடித்துள்ளார். நடிகர் விசுவின் ‘குடும்பம் ஒரு கதம்பம்’ என்கிற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான பூபதி. அதையடுத்து சின்ன சின்ன வேடங்களில் நடித்து வந்தார். மகன் மீது அதிக பாசம் கொண்டிருந்த மனோரமா, அவருக்காக ‘தூரத்து பச்சை’ என்கிற திரைப்படத்தையும் தயாரித்தார். ஆனால் அப்படம் தோல்வி அடைந்தது.
மனோரமா மகன் பூபதி காலமானார்
சினிமா கைகொடுக்காததால், சின்னத்திரை சீரியல்கள் பக்கம் சென்ற பூபதி, சில ஆண்டுகள் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்தார். அதிலும் அவரால் பெரியளவில் சோபிக்கவில்லை. பூபதிக்கு திருமணமாகி, ராஜராஜன் என்கிற மகன் மற்றும் மீனாட்சி, அபிராமி என இரு மகள்களும் இருக்கிறார்கள். கடந்த சில நாட்களாக மூச்சு திணறலால் அவதிப்பட்டு வந்த பூபதி, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார்.
ஆனால் இன்று காலை அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது மறைவுக்கு திரைப்பிரபலங்களும் உறவினர்களும் நேரில் அஞ்சலி செலுத்தி வருகின்றனர். மனோரமா மகன் பூபதியின் இறுதிச் சடங்கு, அக்டோபர் 24ந் தேதி மதியம் 3 மணியளவில் கண்ணம்மா பேட்டையில் உள்ள மயானத்தில் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டு உள்ளது. அதுவரை அவரது உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு உள்ளது.