லட்சுமி மேனன் உடன் திருமணமா?... விஷயம் பெரிதானதால் உண்மையை போட்டுடைத்த விஷால்
நடிகை லட்சுமி மேனனை நடிகர் விஷால் காதலிப்பதாகவும், இருவரும் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல் பரவிய நிலையில், அதுகுறித்து விஷால் விளக்கம் அளித்துள்ளார்.
தமிழ் சினிமாவில் உதவி இயக்குனராக அறிமுகமாகி, பின்னர் நடிகராக கலக்கிக் கொண்டிருப்பவர் விஷால். சண்டக்கோழி, திமிரு, தாமிரபரணி, செல்லமே போன்ற பிளாக்பஸ்டர் ஹிட் படங்களை கொடுத்த விஷால், சமீப காலமாக தொடர் தோல்விகளை சந்தித்து வருகிறார். இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த வீரமே வாகை சூடும், லத்தி போன்ற படங்கள் படு தோல்வியை சந்தித்தன. இதனால் ஹிட் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஷால்.
அவர் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் திரைப்படம் மார்க் ஆண்டனி. ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இப்படம் டைம் டிராவலை மையமாக வைத்து உருவாக்கப்பட்டு உள்ளது. இதில் விஷால் உடன் செல்வராகவன், எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்துள்ளது. ஜிவி பிரகாஷ் குமார் இப்படத்திற்கு இசையமைக்கிறார். மார்க் ஆண்டனி திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் விநாயகர் சதுர்த்தி பண்டிகைக்கு ரிலீஸ் ஆக உள்ளது.
இதையடுத்து இயக்குனர் ஹரி இயக்கத்தில் உருவாகி வரும் புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார் விஷால். பூஜை படத்துக்கு பின் ஹரியும் விஷாலும் இணைந்துள்ள இப்படத்தின் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், நடிகர் விஷாலின் திருமணம் குறித்து அண்மையில் ஒரு தகவல் பரவியது. அவர் நடிகை லட்சுமி மேனனை காதலித்து வருவதாகவும், இருவரும் விரைவில் திருமணம் செய்துகொள்ள உள்ளதாகவும் தகவல்கள் பரவி வந்தன.
இதையும் படியுங்கள்... அடுத்தது ஜவான்... கோலிவுட் படையுடன் சூப்பர்ஸ்டாருக்கு தண்ணிகாட்ட வருகிறார் பாலிவுட் பாட்ஷா; ஜெயிலரை முந்துமா?
இந்நிலையில், அதுகுறித்து நடிகர் விஷாலே விளக்கம் அளித்துள்ளார். அதன்படி அவர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : “என்னை பற்றிய பொய்யான செய்திகளுக்கும் வதந்திகளுக்கு நான் பதிலளிப்பதில்லை. அது பயனில்லாதது என தெரியும். ஆனால் நடிகை லட்சுமி மேனன் உடன் எனக்கு திருமணம் என பரவும் செய்தியை நான் முற்றிலுமாக மறுக்கிறேன். அது ஆதரமற்ற தகவல். அவர் ஒரு நடிகை என்பதை தாண்டி அவர் ஒரு பெண் என்பதால் தான் இதற்கு விளக்கம் அளிக்கிறேன்.
இதுபோன்ற வதந்திகளை பரப்புவதனால் நீங்கள் ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை சிதைப்பதோடு மட்டுமின்றி அடையாளத்தையும் கெடுக்கிறீர்கள். நான் யாரை கல்யாணம் பண்ண போகிறேன் என்பதை காலமும், நேரமும் கணிக்க முடியாது. சரியான நேரம் வரும்போது திருமணம் குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிப்பேன்” என பதிவிட்டு லட்சுமி மேனன் உடனான திருமண வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார் விஷால்.
இதையும் படியுங்கள்... பீஸ்ட்டை விட கம்மி வசூல்... தமிழ்நாட்டில் ஜெயிலருக்கு இப்படி ஒரு நிலைமையா? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ