அடுத்தது ஜவான்... கோலிவுட் படையுடன் சூப்பர்ஸ்டாருக்கு தண்ணிகாட்ட வருகிறார் பாலிவுட் பாட்ஷா; ஜெயிலரை முந்துமா?
ஜெயிலர் படத்துக்கு அடுத்தபடியாக மிகப்பெரிய பான் இந்தியா படமாக ரிலீஸ் ஆக உள்ளது ஷாருக்கானின் ஜவான் திரைப்படம் தான், அதைப்பற்றி தற்போது பார்க்கலாம்.
2023-ம் ஆண்டின் முதல் பாதியில் விஜய்யின் வாரிசு, அஜித்தின் துணிவு, மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் 2 போன்ற பிரம்மாண்ட திரைப்படங்கள் ஆக்கிரமித்த நிலையில், இந்த ஆண்டின் இரண்டாம் பாதியில் ரிலீஸ் ஆகியுள்ள முதல் பிரம்மாண்ட திரைப்படம் ஜெயிலர் தான். சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடித்துள்ள இப்படத்தை நெல்சன் இயக்கி உள்ளார். தர்பார், அண்ணாத்த என அடுத்தடுத்த தோல்வியால் துவண்டு இருந்த ரஜினிக்கு ஜெயிலர் தரமான கம்பேக் படமாக அமைந்துள்ளது.
தமிழ் சினிமாவில் இந்த ஆண்டு அதிக வசூலை வாரிக்குவிக்கும் படமாக ஜெயிலர் தான் இருக்கும் என்பது கிட்டத்தட்ட உறுதியாகிவிட்டது. இந்த ஆண்டு வெளியான தமிழ் படங்களில் பொன்னியின் செல்வன் 2 மட்டும் தான் ரூ.350 கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. அந்த சாதனையை ஜெயிலர் அசால்டாக அடித்துவிடும் என்பது அப்படத்தின் முதல் நாள் கலெக்ஷன் மூலமே தெரிந்துவிட்டது. ஆனால் இந்திய அளவில் ஜெயிலர் அதிக வசூலை வாரிக்குவித்த படமாக இருக்குமா என்பது கேள்விக்குறி தான்.
இந்திய அளவில் இந்த ஆண்டு அதிகம் வசூலித்த திரைப்படங்களில் ஷாருக்கானின் பதான் தான் முதலிடத்தில் உள்ளது. அப்படம் ஆயிரம் கோடிக்கு மேல் வசூலித்து இருந்தது. ஜெயிலர் படமும் அந்த வசூலை நெருங்க வாய்ப்புள்ளதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்பட்டாலும், அந்த சாதனை ஒரு மாதத்திலேயே முறியடிக்கப்படவும் வாய்ப்புள்ளது. ஆம், ரஜினியின் ஜெயிலருக்கு அடுத்தபடியாக பிரம்மாண்டமாக ரிலீஸ் ஆக உள்ள பான் இந்தியா திரைப்படம் ஜவான் தான்.
இதையும் படியுங்கள்... ஷாரூக்கானுடன் மிரட்டல் லுக்கில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா! வைரலாகும் 'ஜவான்' பட புதிய போஸ்டர்!
ஜவான் திரைப்படத்தில் ஷாருக்கான் நாயகனாக நடித்துள்ளார். இப்படத்தை தமிழ் சினிமாவின் ஹிட் இயக்குனர் அட்லீ தான் இயக்கி உள்ளார். இதுதவிர இப்படத்தில் கோலிவுட் நட்சத்திரங்களான லேடி சூப்பர்ஸ்டார் நயன்தாரா, மக்கள் செல்வன் விஜய் சேதுபதி, நகைச்சுவை நடிகர் யோகிபாபு, பருத்திவீரன் நாயகி பிரியாமணி ஆகியோர் நடித்துள்ளனர். அதோடு ராக்ஸ்டார் அனிருத்தும் இப்படத்தின் மூலம் பாலிவுட்டில் எண்ட்ரி கொடுத்துள்ளார்.
இப்படி பலமான கோலிவுட் படையுடன் காத்திருக்கும் ஷாருக்கான், ஜவான் நிச்சயம் பிரம்மாண்ட வெற்றியை ருசிக்கும் என்கிற நம்பிக்கையில் உள்ளார். இதனால் தமிழ்நாட்டில் ஜவான் படம் மிகப்பெரிய வசூலில் சாதனை நிகழ்த்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது. அதோடு விஜய்யும் ஜவான் படத்தில் கேமியோ ரோலில் நடித்துள்ளதாக கூறப்படுகிறது. அது உறுதியானால் அப்படம் நிச்சயம் ரஜினியின் ஜெயிலர் சாதனைகளை தட்டி தூக்கிவிடும் என கோலிவுட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. ஜவான் திரைப்படம் வருகிற செப்டம்பர் மாதம் 7-ந் தேதி திரைக்கு வர உள்ளது.
இதையும் படியுங்கள்... பீஸ்ட்டை விட கம்மி வசூல்... தமிழ்நாட்டில் ஜெயிலருக்கு இப்படி ஒரு நிலைமையா? முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் இதோ