ஷாரூக்கானுடன் மிரட்டல் லுக்கில் விஜய் சேதுபதி மற்றும் நயன்தாரா! வைரலாகும் 'ஜவான்' பட புதிய போஸ்டர்!
இயக்குனர் அட்லீ இயக்கத்தில், உருவாகியுள்ள 'ஜவான்' படத்தின் புதிய போஸ்டர் ஒன்று வெளியாகி சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் ஆகி வருகிறது.
இயக்குனர் அட்லீ, தளபதி விஜய்யை வைத்து கடைசியாக இயக்கிய பிகில் திரைப்படத்தைத் தொடர்ந்து, பாலிவுட் கிங் காங் ஷாருக்கானை வைத்து தன்னுடைய அடுத்த படத்தை இயக்க உள்ளதாக அறிவித்தார். இந்த அறிவிப்பு வெளியாகி, கிட்டத்தட்ட மூன்று வருடங்கள் ஆகும் நிலையில்.. நீண்ட காத்திருப்புக்கு பின்னர் ஷாருக்கானை வைத்து 'ஜவான்' படத்தை இயக்கி முடித்துள்ளார்.
தமிழ், தெலுங்கு, ஹிந்தி, ஆகிய மொழிகளில் உருவாக்கி உள்ள 'ஜவான்' திரைப்படம் செப்டம்பர் 7ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாக உள்ளது. மேலும் அவ்வபோது இந்த படம் குறித்த சில தகவல்களும் வெளியாகி வருகிறது. 'ஜவான்' படத்தின் படப்பிடிப்பு பணிகள் அனைத்தும் முடிவடைந்து, போஸ்ட் புரோடக்ஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிர கவனம் செலுத்தி வருகிறார்கள்.
ஜவான் படத்தின் மூலம் நடிகை நயன்தாரா ஷாருக்கானுக்கு ஜோடியாக பாலிவுட் திரை உலகில் அறிமுகமாகிறார். இந்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்க காமெடியனாக யோகி பாபு நடித்துள்ளார்.மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் உருவாகியுள்ள இந்த படத்தில் இருந்து சமீபத்தில் வெளியான, 'வந்த இடம்' ஃபர்ஸ்ட் சிங்கிள் பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது ஷாருக்கான், விஜய் சேதுபதி, நயன்தாரா ஆகிய மூவரும் இடம் பெற்றுள்ள புதிய போஸ்டர் ஒன்றை படக்குழு வெளியிட்டுள்ளது.
மொட்டை தலையோடு ஷாருக்கானும், தாடி மீசையுடன் சால்ட் அண்ட் பெப்பர் லுக்கில் விஜய் சேதுபதியும், மிரட்டல் லுக்கில் நயன்தாரா கையில் கன்னோடு இருப்பது போலவும் இந்த போஸ்டரில் உள்ளனர். ஷாருக்கான் நடிப்பில் கடைசியாக வெளியான 'பதான்' திரைப்படம் ஆயிரம் கோடி வசூல் கிளப்பில் இணைந்த நிலையில், ஜவான் படமும் இதே போன்ற வசூல் சாதனையை நிகழ்த்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் தற்போது வெளியாகி உள்ள போஸ்டரை ஷாருக்கானின் ரசிகர்கள் தாறுமாறாக சமூக வலைதளத்தில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.