நான் 10 வருஷமா லாக் டவுனில் இருக்கிறேன்... கலங்கி அழுத வைகைப்புயல் வடிவேலு..!
மீம்ஸ் நாயகனாக மட்டுமே கண்டு ரசிக்கப்பட்டு கொண்டிருக்கும், வைகைப் புயல் வடிவேலு... 'கர்ணன்' பட பாடலை பாடி, கலங்கி அழுதது அவரது ரசிகர்கள் நெஞ்சங்களை கவலையடைய செய்துள்ளது.
1990ம் ஆண்டு முதலே தமிழ் சினிமாவை மையம் கொண்டு காமெடி புயலாக கலக்கி வருபவர் வைகைப் புயல் வடிவேலு. இன்று வரை வடிவேல் ஏதாவது ஒரு படத்தில் ஒரு காட்சியிலாவது நடிக்க மாட்டாரா? எனும் ஏங்கும் ரசிகர்கள் ஏராளம். அப்படிப்பட்ட லட்சக்கணக்கான ரசிகர்கள் பட்டாளத்தைக் கொண்டுள்ளார்.
நகைச்சுவையில் தனக்கென தனி பாணியை ஏற்படுத்திக் கொண்டு சினிமா ரசிகர்களை சிரிக்க வைத்த அற்புதக் கலைஞன். ‘வீச்சருவா வீராசாமி’, ‘சூனா பானா’,‘தீப்பொறி திருமுகம்’, ‘நாய் சேகர்’, ‘ஸ்நேக் பாபு’, ‘படித்துறை பாண்டி’, ‘என்கவுண்டர் ஏகாம்பரம்’, ‘பாடி சோடா’, ‘வண்டு முருகன்’, ‘அலாட் ஆறுமுகம்’ என ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் தனி ஸ்டைல், உடல்மொழி, வசனம் என ரசிகர்களை குதூகலப்படுத்தியவர்.
மீம்ஸ் நாயகனாக மட்டுமே கண்டு ரசித்து வந்த வைகைப் புயல் வடிவேலு சமீபத்தில், சரியான பட வாய்ப்புகள் இல்லாமல் அல்லாடி கொண்டிருக்கிறார். இதிலே இவர் தான் நடிக்க ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என்றது, 'இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி' படக்குழு.
இவரை பற்றிய சர்ச்சைகள் நீண்டு கொண்டே இருக்க, ஐபிஎஸ் அதிகாரிகள், ஐஏஎஸ் அதிகாரிகள் உறுப்பினர்களாக இருக்கும் நன்பேண்டா வாட்ஸ்அப் குழுவில் நண்பர்கள் சந்திப்பு குழுவில் வடிவேலு கலந்து கொண்டு பேசி அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தார் வடிவேலு.
உடல் மெலிந்து காணப்பட்ட இவர், 'கர்ணன்' படத்தில் இருக்கும் 'சேராத இடம் சேர்த்து வஞ்சத்தில் வீழ்ந்தாயடா' என கனத்த குரலில் பாடி, சோகத்தை வெளிப்படுத்தியதோடு கண் கலங்கி அழுதார். மேலும் நீங்கள் எல்லாம் ஒரு வருடம் தானே லாக் டவுனில் இருக்கிறீர்கள் நான் 10 வருடமாக லாக் டவுனில் இருக்கிறேன் வீட்டிலேயே முடங்கி கிடப்பது எவ்வளவு ரணம் தெரியுமா என உருக்கமாக பேசினார்.
எப்போதும் என்னுடைய உடலில் தெம்பு இருக்கிறது, நடிக்க ஆசையும் இருக்கிறது, ஆனால் யாரும் வாய்ப்புக்கொடுப்பதில்லை என கலங்கினார். தற்போது திரையுலகில் நடிக்காவிட்டாலும், ஒவ்வொரு நாளும் தன்னுடைய காமெடியால் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை சிரிக்க வைத்து கொண்டிருக்கும் இவருக்கு இந்த நிலை என ரசிகர்கள் தங்களுடைய வேதனையை சமூக வலைத்தளத்தில் தெரிவித்து வருகிறார்கள்.
அதே நேரத்தில்... பிரபல அரசியல் கட்சிக்கு ஆதரவாக, முன்னணி நடிகர் மற்றும் அரசியல் தலைவர் ஒருவரை ஓவராக விமர்சித்து பேசிய பின்பே இவருக்கு பட வாய்ப்புகள் குறைந்துள்ளது. இதை மனதில் வைத்து கொண்டு தான் 'கர்ணன்' பட பாடலை வடிவேலு பாடியதாக சிலர் கூறிவருகிறார்கள்.