Srikanth : நடிகர் ஸ்ரீகாந்துக்கு இத்தனை ஆண்டுகள் சிறை தண்டனையா? வெளிவந்த ஷாக் தகவல்
நடிகர் ஸ்ரீகாந்த் போதைப் பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு தண்டனை விதிக்கப்பட்டால் எத்தனை ஆண்டுகள் அவர் சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என்பதை பார்க்கலாம்.

Srikanth Drug Case
தடை செய்யப்பட்ட போதைப்பொருளை வாங்கி பயன்படுத்திய குற்றத்திற்காக நடிகர் ஸ்ரீகாந்தை போலீசார் கைது செய்துள்ளனர். நடிகர் ஸ்ரீகாந்த், தன்னை வைத்து தீங்கிரை என்கிற படத்தை தயாரித்த பிரசாத் என்பவரிடம் போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தி வந்திருக்கிறார். தீங்கிரை படத்திற்காக தனக்கு பேசப்பட்ட 10 லட்சம் பணத்தை கொடுக்காமல் இழுத்தடித்து வந்த பிரசாத், அதற்கு பதிலாக தனக்கு கொக்கைன் போதைப் பொருளை கொடுத்து அதற்கு தன்னை அடிமையாக்கியதாக ஸ்ரீகாந்த் வாக்குமூலம் அளித்துள்ளார்.
புழல் சிறையில் ஸ்ரீகாந்த்
பிரசாத்திடம் இருந்து கிட்டத்தட்ட 5 லட்சம் ரூபாய்க்கு போதைப்பொருள் வாங்கி பயன்படுத்தி இருக்கிறார் ஸ்ரீகாந்த். அவர் போதைப்பொருள் பயன்படுத்தியது விசாராணையில் உறுதியானதை அடுத்து ஸ்ரீகாந்தை கைது செய்த போலீசார் அவரை எழும்பூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அங்கு அவரை நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உத்தரவிடப்பட்டது. இதையடுத்து நடிகர் ஸ்ரீகாந்தை புழல் சிறையில் அடைத்துள்ளனர். அங்கு அவருக்கு சகல வசதிகளும் செய்துகொடுக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது.
ஸ்ரீகாந்தை அடுத்து சிக்கப்போவது யார்?
நடிகர் ஸ்ரீகாந்த் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது அவர் தனக்கு ஜாமீன் தரக் கோரி நீதிபதியிடம் கதறினாராம். தன்னுடைய மகனை கவனித்துக் கொள்ள வேண்டும் என கெஞ்சினாராம். இருப்பினும் அவருக்கு ஜாமீன் வழங்கப்படவில்லை. ஸ்ரீகாந்தைப் போல் போதைப் பொருள் வழக்கில் நடிகர் கிருஷ்ணாவும் சிக்கி உள்ளார். அவர் தற்போது கேரளாவில் தலைமறைவாக உள்ளதாகவும், அவரை தேடும் பணியில் 5 தனிப்படை போலீசார் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மொபைல் ஸ்விட்ச் ஆஃபில் உள்ளதால் அவரைப் பிடிக்க தனிப்படை போலீசார் கேரளாவுக்கு விரைந்துள்ளனர்.
ஸ்ரீகாந்துக்கு எத்தனை ஆண்டு சிறை?
போதைப் பொருள் வழக்கில் ஸ்ரீகாந்த் மூன்றாவது குற்றவாளியாக சேர்க்கப்பட்டு உள்ளார். பொதுவாக போதைப் பொருள் வழக்கில் கைதானவர்களுக்கு 10 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்படுமாம். நடிகர் ஸ்ரீகாந்துக்கும் தண்டனை அறிவிக்கப்பட்டால் அவர் 10 ஆண்டுகள் வரை சிறை தண்டனை அனுபவிக்க நேரிடும் என கூறப்படுகிறது. ஒரு வேளை 10 ஆண்டு சிறை தண்டனை கிடைத்தால் அவரின் சினிமா கெரியரே ஒட்டுமொத்தமாக காலியாகிவிடும். இந்த வழக்கில் மேலும் சில நடிகர், நடிகைகளும் சிக்க வாய்ப்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.