புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர் ஷிஹான் ஹுசைனி காலமானார்
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஷிஹான் ஹுசைனி, சிகிச்சை பலனின்றி இன்று உயிரிழந்தார். அவருக்கு வயது 60.

Actor Shihan Hussaini Passed Away : திரைப்பட நடிகரும், கராத்தே பயிற்சியாளருமான ஹுசைனி, புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். தான் உயிர் வாழ வேண்டும் என்றால் அதற்கு தினசரி 2 யூனிட் ரத்தம் தேவைப்படுவதாகவும், அதனால் தன்னால் நீண்டநாள் உயிர் வாழ முடியாது எனவும் அவர் அண்மையில் வீடியோ வெளியிட்டிருந்தது பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது.
Shihan Hussaini
மருத்துவமனையில் இருந்து அவர் வெளியிட்ட வீடியோவை பார்த்து பதறிப்போன திரைத்துறையினர் தொடர்ந்து அவருக்கு பல்வேறு உதவிகளை செய்ததோடு, நேரில் சென்று ஆதரவும் தெரிவித்தனர். இந்நிலையில், நடிகர் ஹுசைனி நள்ளிரவு 1.45 மணியளவில் உயிரிழந்து விட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்கு வயது 60. அவரது மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அவரது மறைவுக்கு பலரும் சமூக வலைதளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... அண்ணாமலையுடன் வீடியோ காலில் பேசிய ஷிஹான் ஹுசைனி! சமூக வலை தளங்களில் வீடியோ வைரல்!
Shihan Hussaini Death
இறப்பதற்கு சில நாட்கள் முன்னதாக நடிகர் ஹுசைனி தனது உடல் உறுப்புகளை தானம் செய்வதாக அறிவித்து இருந்தார். இதுகுறித்து அவர் தரப்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில், மருத்துவம், உடற்கூறியல் மற்றும் ஆராய்ச்சிக்காக தனது உடலை தானம் செய்வதாகவும், தன்னுடைய இதயத்தை மட்டும் கராத்தே மற்றும் வில் வித்தை மாணவர்களிடம் பாதுகாப்பாக ஒப்படைக்குமாறும் கேட்டுக்கொள்கிறேன் என அந்த அறிக்கையில் தெரிவித்திருந்தார். அவரின் இந்த முடிவை திரையுலகினரும், ரசிகர்களும் கனத்த இதயத்தோடு பாராட்டினர்.
Shihan Hussaini Cinema Carrier
மதுரையை சேர்ந்தவர் ஹுசைனி. இவர் 1986ம் ஆண்டு வெளியான புன்னகை மன்னன் படத்தின் மூலம் சினிமாவில் நடிகராக அறிமுகமானார். பல படங்களில் சின்ன சின்ன வேடங்களில் நடித்தாலும், விஜய்யின் பத்ரி படத்தில் நடித்த பின்னர் தான் இவர் பேமஸ் ஆனார். கடைசியாக இவர் கடந்த 2022ம் ஆண்டு விக்னேஷ் சிவன் இயக்கிய காத்துவாக்குல ரெண்டு காதல் படத்தில் நடித்திருந்தார். சினிமாவைத் தாண்டி வில்வித்தை மற்றும் கராத்தேவிலும் சிறந்து விளங்கிய ஹுசைனி அதற்கான பயிற்சியையும் வழங்கி வந்தார்.
இதையும் படியுங்கள்... ரத்த புற்றுநோயால் உயிருக்கு போராடும் ஷிஹான் ஹுசைனி.! ஓடோடி சென்று உதவிய தமிழக அரசு