இறப்பதற்கு முன்பே தனக்காக கல்லறை கட்டி வைத்துள்ள நடிகர் ராஜேஷ் - காரணம் என்ன?
நடிகர் ராஜேஷ் இறக்கும் முன்பே தனக்கு கல்லறை கட்டிவிட்டாராம். 40 வயதிலேயே அவர் தனக்கான கல்லறையை கட்டி இருக்கிறார்.

Actor Rajesh Graveyard
பழம்பெரும் நடிகர் ராஜேஷ், உடல்நலக்குறைவால் இன்று காலமானார். அவரின் மறைவு திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்நிலையில், நடிகர் ராஜேஷ் பற்றிய அரிய தகவல் ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. அது என்னவென்றால், நடிகர் ராஜேஷ் இறக்கும் முன்பே தனக்கு கல்லறை கட்டிவிட்டாராம். அதை அவர் எதற்காக கட்டினார். அதன் பின்னணி என்ன என்பதை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
40 வயதிலேயே கல்லறை கட்டிய ராஜேஷ்
தன்னுடைய கல்லறையை தனது 40 வயதிலேயே கட்டி இருக்கிறார் ராஜேஷ். சிலையெல்லாம் வைத்து கட்டி இருக்கிறாராம். முதலில் மார்பிளில் கட்டி இருந்த அவர், 25 ஆண்டுகளில் இடிந்துவிட்டதால் பின்னர் கிரானைட் கல்லை வைத்து தன்னுடைய கல்லறையை கட்டி இருக்கிறார். சினிமாவில் இறந்துபோல் நடித்தாலே, அவர்களை திரும்ப சிரிக்க வைத்து போட்டோ எடுக்கும் பழக்கம் உண்டு, அப்படி இருக்கையில், இறக்கும் முன்பே கல்லறை கட்டிக் கொண்டது ஏன் என்பதைப் பற்றி ராஜேஷே ஒரு பேட்டியில் கூறி இருக்கிறார்.
இறக்கும் முன் கல்லறை கட்டியது ஏன்?
ஜிஆர்பி விஸ்வநாதனிடம் இருந்து தான் இதைக் கற்றுக் கொண்டாராம் ராஜேஷ். அவர் தான் இறக்கும் முன்பே கல்லறை கட்டினாராம். அது கட்டி முடித்து 27 வருடங்கள் கழித்து இறந்தாராம். ‘தனக்கு எவன் கல்லறை கட்டுகிறானோ அவன் 100 ஆண்டுகள் வாழ்வான்’ என சீனப் பழமொழி ஒன்று உள்ளதாம். அதை பின்பற்றி தான் இறக்கும் முன்பே கல்லறை கட்டி இருக்கிறாராம் ராஜேஷ்.
தன்னுடைய மகனுக்கோ அல்லது மகளுக்கு கல்லறையை எப்படி கட்ட வேண்டும் என்பதை இறந்த பின்னர் சொல்ல முடியாது என்பதால், தனக்கு பிடித்தவாரே தன்னுடைய கல்லறையை கட்டிவிட்டாராம் ராஜேஷ். அதில் என்னென்ன வசனங்கள் இடம்பெற வேண்டும் என்பது முதற்கொண்டு தேர்வு செய்து அந்த கல்லறையில் எழுதிவைத்துவிட்டாராம்.
கல்லறை கட்டிய பின் 35 ஆண்டுகள் வாழ்ந்த ராஜேஷ்
மேலும் அந்த பேட்டியில் குட்டி ஸ்டோரி ஒன்றையும் சொல்லி உள்ளார் ராஜேஷ். ஒரு ஹாலிவுட் நடிகை இறந்துபோய், தன்னுடைய மறு பிறவியில் மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து, செத்துப் போன தன்னுடைய முதல் பிறவியினுடைய கல்லறைக்கு சென்று அங்குள்ள ஜாடியில் வைக்கப்பட்டிருந்த தன்னுடைய முற்பிறவி சாம்பலை எடுத்துவிட்டு வந்தாராம். அந்த மாதிரி தனக்கு கல்லறையை பார்க்கும் வாய்ப்பு இறக்கும் முன்பே கிடைத்ததாக அந்த பேட்டியில் கூறி இருக்கிறார் ராஜேஷ். 40 வயதில் தனக்குத் தானே கல்லறை கட்டிய ராஜேஷ், அதன்பின் 35 ஆண்டுகள் வாழ்ந்திருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.