ஆசிரியர், டப்பிங் கலைஞர், எழுத்தாளர்.. நடிகர் ராஜேஷ் பற்றி தெரியாத தகவல்கள்
தமிழ் திரையுலகில் 40 ஆண்டுகளுக்கும் மேலாக நடிகராக வலம் வந்த ராஜேஷ் (75) உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மே 29) காலமாகியுள்ளார். பன்முகத் திறமையாளரான அவர் குறித்து தெரியாத தகவல்களை இந்த பதிவில் விரிவாக பார்க்கலாம்.

பள்ளி ஆசிரியராக வாழ்க்கையைத் தொடங்கிய ராஜேஷ்
மன்னார்குடியில் வில்லியம்ஸ் நாட்டார், லில்லி கிரேஸ் தம்பதிகளுக்கு மகனாகப் பிறந்த அவர், பள்ளிப்படிப்பை பல இடங்களில் படித்துள்ளார். பின்னர் காரைக்குடி அழகப்பா கல்லூரியில் பி.யு.சி முடித்த பிறகு பச்சையப்பாஸ் கல்லூரியில் சேர்ந்தார். ஆனால் அவரால் கல்லூரி கல்வியை முடிக்க முடியவில்லை. இருப்பினும் புரசைவாக்கம் செயிண்ட் பால்ஸ் உயர்நிலைப் பள்ளியிலும், திருவல்லிக்கேணி கெல்லட் மேல்நிலைப் பணியிலும் 1972 முதல் 1979 வரை சுமார் 7 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றினார்.
டப்பிங் கலைஞராக பணியாற்றிய ராஜேஷ்
அதன் பின்னர் ‘அவள் ஒரு தொடர்கதை’ படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த அவருக்கு 1979-ம் ஆண்டு ‘கன்னிப்பருவத்திலே’ என்ற படத்தில் கதாநாயகனாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்த அவர் டப்பிங் கலைஞராகவும் பல படங்களில் பணியாற்றியுள்ளார். ‘டும் டும் டும்’, ‘மஜா’, ‘உள்ளம் கேட்குமே’ உள்ளிட்ட படங்களில் நடிகர் முரளிக்காக பின்னணி குரல் கொடுத்துள்ளார். ‘பொய் சொல்ல போறோம்’ படத்தில் நெடுமுடி வேணுவுக்காக குரல் கொடுத்துள்ளார். இன்னும் சில படங்களில் டப்பிங் கலைஞராக பணியாற்றியுள்ளார்.
9 புத்தகங்கள் எழுதிய நடிகர் ராஜேஷ்
நடிகர் ராஜேஷ் தமிழில் ஒன்பது புத்தகங்கள் எழுதியிருக்கிறார். ஒரு நாளிதழுக்காக முரண்களை பற்றிய ‘முரண் சுவை’ என்ற தொடரை எழுதியிருந்தார். இந்திரா காந்தி விஷயத்தில் பாதுகாவலர்களே கொலைகாரர்களாக மாறிய முரணைப் பார்த்த ராஜேஷ், ஹிட்லர், டால்ஸ்டாய், காமராஜர், செல்லம்மா பாரதி, ஐன்ஸ்டைன் என 52 வாரங்கள் பல்வேறு ஆளுமைகளைப் பற்றி எழுதியுள்ளார். மேலும் உலகின் சிறந்த திரைப்படங்கள், சிறந்த இயக்குனர்கள், நடிகைகள், நடிகை ஆட்ரே ஹெப்பர்னைப் பற்றிய புத்தகம் ஒன்று, ஜோதிடம், புரியாத புதிர் உள்ளிட்ட புத்தகங்களையும் அவர் எழுதியுள்ளார்.
சின்னத்திரையிலும் கலக்கிய ராஜேஷ்
வெள்ளித்திரை மட்டுமல்லாது சின்னத்திரை தொடர்களிலும் ராஜேஷ் நடித்துள்ளார். சன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘அலைகள்’, ‘கணவருக்காக’, ‘ஆண்பாவம்’ போன்ற தொடர்களிலும், விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘களத்து வீடு’, ‘கனா காணும் காலங்கள்’, போன்ற தொடர்களிலும் நடித்துள்ளார். 2018 முதல் 2022ம் ஆண்டு வரை சன் டிவியில் வெற்றிகரமான ஒளிபரப்பான ‘ரோஜா’ சீரியலில் டைகர் மாணிக்கம் என்கிற கதாபாத்திரத்தில் நடித்து அசத்தினார். இறுதியாக அவர் ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கார்த்திகை தீபம்’ தொடரில் தர்மலிங்கம் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார்.
யூடியூபராக மாறிய ராஜேஷ்
கொரோனா காலக்கட்டத்தில் பலரும் யூடியூபர்களாக மாறிய நிலையில், ராஜேஷும் தான் கற்ற விஷயங்களை மக்களுடன் பகிர்ந்து கொள்வதற்காக யூடியூபில் வீடியோக்களை வெளியிட்டு வந்தார். 18 தமிழர்கள் கெய்ரோவில் கப்பலில் மாட்டிக் கொண்டபோது ராஜேஷின் வீடியோக்கள் அவர்களுக்கு பயனுள்ளதாகவும், மன அழுத்தத்தை குறைக்க உதவியதாக அவர்கள் வீடு திரும்பிய பின்னர் ராஜேஷிடம் கூறியுள்ளனர். அவர்கள் கூறிய அந்த வார்த்தைகள் தனக்கு மிகுந்த மன நிம்மதியை ஏற்படுத்தியிருந்ததாக ராஜேஷ் பேட்டி ஒன்றில் கூறியிருந்தார்.
உடல்நலக்குறைவால் காலமானார் ராஜேஷ்
ஏழு வருடம் ஆசிரியர் பணி, 47 வருடங்கள் நடிகர், டப்பிங் கலைஞர், 9 புத்தகங்களை எழுதிய எழுத்தாளர், அரசியல் ஈடுபாடு என பன்முகத் திறமையாளராக வலம் வந்த நடிகர் ராஜேஷ் உடல்நலக் குறைவு காரணமாக இன்று (மே 29) காலமாகியுள்ளார். அவரது மறைவுக்கு தமிழ் திரையுலகினர், அரசியல் பிரபலங்கள், பொதுமக்கள் என பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.