Actor Mayilsamy : காற்றில் கலந்த காமெடி கிங்... நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது
மாரடைப்பால் மரணம் அடைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் உடன் சென்னை வடபழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது.
தமிழ் திரையுலகில் அஜித், விஜய், கமல், ரஜினி என அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களிலும் நகைச்சுவை வேடங்களில் நடித்து மக்கள் மனதில் இடம்பிடித்தவர் மயில்சாமி. இவர் நேற்று அதிகாலை சென்னை கேளம்பாக்கத்தில் உள்ள ஸ்ரீ மேகநாதீஸ்வரர் கோவிலில் நடைபெற்ற சிவராத்திரி சிறப்பு பூஜையில் பங்கேற்றுவிட்டு வீடு திரும்பும் நேரத்தில் மாரடைப்பு ஏற்பட்டு மயங்கி விழுந்துள்ளார். உடனடியாக அவரை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு அருகில் உள்ள போரூர் ராமச்சந்திரா மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர். இதையடுத்து நேற்று அதிகாலையில் இருந்தே சென்னை சாலிகிராமத்தில் உள்ள மயில்சாமியின் வீடு பரபரப்பாக காணப்பட்டது. அவரது திடீர் மறைவால் அதிர்ச்சி அடைந்த அவரது திரையுலக நண்பர்களான நடிகர்கள் மனோபாலா, எம்.எஸ்.பாஸ்கர் ஆகியோர் ஓடோடி வந்து கண்ணீர்விட்டு கதறி அழுதபடி அஞ்சலி செலுத்தினர்.
இதையும் படியுங்கள்... சிவ வாத்தியங்கள் முழங்க... நடிகர் மயில்சாமியின் இறுதி ஊர்வலம் - கலங்கவைக்கும் வீடியோ இதோ
இதையடுத்து நடிகர்கள் சித்தார்த், விஜய் சேதுபதி, செந்தில், உதயநிதி ஸ்டாலின், ரஜினிகாந்த், பாண்டியராஜன், சத்யராஜ், ரோபோ சங்கர், அமுதவாணன் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே வந்து மயில்சாமியின் உடலுக்கு அஞ்சலி செலுத்திவிட்டு சென்றது. குறிப்பாக இன்று காலை அஞ்சலி செலுத்த வந்த நடிகர் ரஜினிகாந்த், மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்று கூறிவிட்டு சென்றிருந்தார்.
இதையடுத்து ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்ட நடிகர் மயில்சாமியின் உடலுக்கு வழிநெடுகிலும் மக்கள் திரண்டு நின்று அவரது உடலுக்கு மலர்தூவி அஞ்சலி செலுத்தினர். இதையடுத்து வடபழனியில் உள்ள ஏ.வி.எம் மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்ட மயில்சாமியின் உடலுக்கு அவரது மகன்கள் இருவரும் கண்ணீர்மல்க இறுதிச்சடங்கு செய்தனர். பின்னர் சடங்குகள் அனைத்தும் முடிந்த பின்னர் நடிகர் மயில்சாமியின் உடல் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படியுங்கள்... Mayilsamy: “ஆண்டவனின் கணக்கு.. மயில்சாமியின் கடைசி ஆசையை நிச்சயம் நிறைவேற்றுவேன்” - நடிகர் ரஜினிகாந்த் உறுதி