அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக இந்த பெயர் சூட்டியுள்ளோம்! மகன் பெயரை வெளியிட்ட கார்த்தி!
நடிகர் கார்த்தி இரண்டாவது முறையாக அப்பாவாக புரோமோஷன் வாங்கியதை தொடர்ந்து, தற்போது தன்னுடைய மகனுக்கு அழகு பெயர் வைத்துள்ளதை ரசிகர்களுடன் பகிர்ந்து கொண்டுள்ளார்.
நடிகர் சிவக்குமாரின் இளைய மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி பருத்தி வீரம் படம் மூலம் சினிமாவில் அறிமுகமானார். முதல்படமே சூப்பர் டூப்பர் ஹிட்டாக தமிழ் சினிமாவின் இளம் நாயகனாக வலம் வர ஆரம்பித்தார்.
'ஆயிரத்தில் ஒருவன்', 'மெட்ராஸ்', 'கைதி' எனப் பல முக்கியமானப் படங்களில் நடித்திருக்கும் கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கத்தில் 'பொன்னியின் செல்வன்' படத்தில் நடித்துவருகிறார்.
நடிகர் கார்த்திக்கும் ஈரோட்டைச் சேர்ந்த ரஞ்சனி என்பவருக்கும் கடந்த 2011ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. பெற்றோர்கள் சம்மதத்துடன் கோவையில் கோலாகலமாக திருமணம் நடந்தது.
அதையடுத்து கார்த்தி - ரஞ்சனி தம்பதிக்கு கடந்த 2013ம் ஆண்டு அழகிய பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பெயர் உமையாள்.
தற்போது 7 ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் கார்த்தியின் மனைவி ரஞ்சனி இரண்டாவது முறையாக கர்ப்பமாக இருந்தார். லாக்டவுனில் கார்த்தி சொன்ன நல்ல செய்தியால் சிவக்குமார் குடும்பத்தினர் மட்டுமல்ல ரசிகர்களும் மகிழ்ச்சியில் உள்ளனர்.
இந்நிலையில் ரஞ்சனிக்கு அழகிய ஆண் குழந்தை பிறந்துள்ளதாக கார்த்தி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
இதை தொடர்ந்து தற்போது தன்னுடைய மகன் பெயரை கார்த்தி வெளியிட்டுள்ளார். தமிழ் கடவுள் முருகனின் மற்றொரு பெயரான 'கந்தன்' என்கிற பெயரை கார்த்தி தன்னுடைய மகனுக்கு சூட்டியுள்ளார்.
கண்ணா,
அம்மாவும், அக்காவும், நானும் உனக்கு மிக ஆசையாக "கந்தன்" என்று பெயர் சூட்டி இருக்கிறோம். உன் வருகையால், நம் சுற்றம் மேலும் இனிமையாகட்டும்.
அன்புடன்...
அப்பா. என ட்விட் செய்துள்ளார்.