ஷாலினி இல்லை; நான் கார் ரேஸிங்கில் பங்கேற்க முக்கிய காரணமே அவர்தான் - அஜித் ஷேரிங்ஸ்
நடிகர் அஜித்குமார் கார் ரேஸில் பிசியாக உள்ள நிலையில், தற்போது தன்னை ரேஸிங்கிற்குள் அழைத்துச் சென்றது யார் என்பதைப் பற்றி பேட்டி ஒன்றில் கூறி உள்ளார்.

Ajith Kumar Interview
தமிழ் திரையுலகில் முன்னணி மாஸ் நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். சமீப காலமாக இவர் தொட்டதெல்லாம் சக்சஸ் ஆகி வருகின்றன. குறிப்பாக கடைசியாக இவர் நடிப்பில் வெளிவந்த குட் பேட் அக்லி திரைப்படம் பிளாக்பஸ்டர் ஹிட்டானது. அதேபோல் தொடர்ச்சியாக மூன்று கார் ரேஸில் பங்கேற்ற அஜித், மூன்றிலுமே வெற்றிவாகை சூடினார். இதுதவிர இந்தியாவின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்ம பூஷண் விருதையும் வென்றிருந்தார் அஜித்.
அஜித்துக்கு கார் ரேஸ் ஆசையை தூண்டிவிட்டது யார்?
நடிகர் அஜித்குமார் 17 வயதில் இருந்தே கார் ரேஸில் பங்கேற்று வருகிறார். இந்த நிலையில், சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றிற்கு அளித்த பேட்டியில், தன்னை ரேஸிங்கிற்குள் அழைத்து சென்ற நபர் யார் என்பதை வெளியிட்டு இருக்கிறார். அதன்படி 1990ம் ஆண்டு செப்டம்பர் மாதம் இரண்டு மணிநேரம் ஓட்டக்கூடிய கார் ரேஸில் பங்கேற்றபோது ஐந்தாம் இடம் பிடித்தாராம் அஜித். அப்போது அஜித்திடம் வந்து பேசிய சுபாஷ் சந்திரபோஸ் என்பவர், தன்னை தொடர்ந்து கார் ரேஸில் பங்கேற்குமாறு அறிவுறுத்தியதாகவும் அதன் பின்னரே தான் கார் ரேஸில் தொடர்ந்து கலந்துகொண்டதாகவும் அஜித் கூறினார்.
அஜித்தின் பெற்றோர் சொன்னதென்ன?
நடிகர் அஜித் பள்ளிப்படிப்பை பாதியில் முடித்ததும் அவரது பெற்றோர் அவரிடம் சொன்னது ஒரே ஒரு விஷயம் தானாம். படி அல்லது வேலைக்கு செல் ஆனால் சும்மா வீட்டில் மட்டும் இருக்கக் கூடாது என கூறினார்களாம். அதுமட்டுமின்றி ரேஸிங்கிற்கு நிறைய செலவழிக்க வேண்டும், எங்களால் அதற்கு செலவழிக்க முடியாமல் போகலாம். அதனால் உனக்கான ஸ்பான்சரை நீ தேடிக் கண்டுபிடித்து முன்னேறு என சொன்னதோடு, அவருக்கு பக்க பலமாக இருந்தார்கள். இந்த விஷயத்தில் தான் ஒரு பாக்கியசாலி என அஜித் கூறி உள்ளார்.
சினிமாவுக்கு நன்றி தெரிவித்த அஜித்
சினிமா திரையுலகிற்கு நன்றி தெரிவித்துள்ள அஜித், அதுதான் தன்னை வாழ்க்கையில் ஒரு நிலைக்கு கொண்டு சென்றதாகவும், எனக்கான தேர்வைகளை பூர்த்தி செய்துகொள்ளவும், என்னுடைய ரேஸிங் கனவை நனவாக்கவும் சினிமா உதவியதாகவும் தெரிவித்துள்ளார். ரேஸிங் தொடர்பாக பேட்டியளிப்பது ஏன் என்பது பற்றி பேசுகையில், அது குறித்து நிறைய பேருக்கு தெரிய வேண்டும் என்பதற்காக பேட்டி அளிப்பதாக அஜித் தெரிவித்துள்ளார்.