- Home
- Business
- அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு? மோடி- எடப்பாடி -விஜய் படம் போட்டு திமுக ஐடி விங் அலப்பறை
அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு? மோடி- எடப்பாடி -விஜய் படம் போட்டு திமுக ஐடி விங் அலப்பறை
ஆரம்பத்தில் பாஜகவை கொள்கை எதிரி என்ற விஜய், கரூர் விபத்திற்குப் பிறகு அதிமுக-பாஜக ஆதரவைப் பெற்றார். இந்த திடீர் மாற்றத்தால், 2026 தேர்தலில் விஜய் பாஜகவிற்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாக திமுக ஐடி விங் கார்ட்டூன் வெளியிட்டு விமர்சித்துள்ளது.

தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் தமிழகத்தில் ஆளுங்கட்சியான திமுக பலம் வாய்ந்த கூட்டணியாக உள்ளது. எனவே இதனை எதிர்ப்பதற்காக அதிமுக தனது அணியை பலப்படுத்தி வருகிறது. அந்த வகையில் முதலில் தவெகவுடன் கூட்டணி ஏற்படுத்த ரகசிய பேச்சு வார்த்தை நடத்தியது.
ஆனால் அப்போது உள்ள சூழ்நிலையால் கூட்டணி உடன்பாடு ஏற்படவில்லை. இதனையடுத்து பாஜகவுடன் அதிமுக கூட்டணியை உறுதி செய்தது.
இந்த சூழ்நிலையில் தான் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் வகையில் பிரச்சாரத்தை தொடங்கிய விஜய், அரசியல் எதிரி திமுக எனவும், கொள்கை எதிரி பாஜக என கடுமையாக விமர்சனம் செய்தார். அதிமுகவை பாஜகவிடம் அடகு வைத்துவிட்டதாகவும் விஜய் விமர்சித்தார். இந்த நிலையில் தான் கரூரில் விஜய் கலந்து கொண்ட பிரச்சார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.
இந்த சம்பவம் தவெகவிற்கு பெரும் பின்னடைவாக பார்க்கப்பட்டது. தமிழக அரசும் தவெகவை குற்றம் சாட்டியது. பல மணி நேரமாக விஜய் காலதாமதமாக வந்ததே விபத்திற்கு காரணம் என கூறப்பட்டது. இந்த நிலையில் விஜய்க்கு ஆதரவாக அதிமுகவும் பாஜகவும் களம் இறங்கியது.
விபத்திற்கு தமிழக அரசு தான் காரணம் எனவும், திமுக முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தான் காரணம் என விமர்சிக்கப்பட்டது. இதனையடுத்து உச்சநீதிமன்றத்தில் தவெக தரப்பு சிபிஐ விசாரணை கேட்டும்,
உச்சநீதிமன்ற நீதிபதி தலைமையில் சிறப்பு கமிட்டி கேட்டும் மனு தாக்கல் செய்திருந்தது. இதனை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. மேலும் சிறப்பு விசாரணை குழுவையும் அமைத்தது.
இந்த நிலையில் வருகிற 2026ஆம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் பாஜகவிற்கு ஆதரவாக விஜய் களம் இறங்கியுள்ளதாக திமுக ஐடி விங் விமர்சித்துள்ளது. இது தொடர்பாக திமுக ஐடி விங் வெளியிட்டுள்ள கார்ட்டூனில் பல்லக்கில் மோடி அமர்ந்திருப்பது போலவும் அதனை முதல் ஆளாக எடப்பாடி பழனிசாமி தூக்கி செல்வது போலவும்,
பின் பக்கத்தில் மறைமுகமாக தவெக தலைவர் விஜய் தூக்கி வருவது போலவும் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதில் அடிமைகள் உடம்பில் ரத்தம் எதற்கு? என்ற பாடல் வரிகளை பதிவிட்டு திமுக ஐடி விங் கிண்டல் செய்துள்ளது.