- Home
- Tamil Nadu News
- தவெகவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் கிடைக்கக்கூடாது என பல தொல்லை கொடுத்த திமுக..! போராடி வக்கீல்களைப் பிடித்தோம் ஆதவ் பகீர்
தவெகவுக்கு சுப்ரீம் கோர்ட்டில் வக்கீல் கிடைக்கக்கூடாது என பல தொல்லை கொடுத்த திமுக..! போராடி வக்கீல்களைப் பிடித்தோம் ஆதவ் பகீர்
கரூரில் 41 பேர் உயிரிழந்த கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த சம்பவத்தில் திமுக அரசு தங்களைக் குறிவைத்து ஜனநாயகப் படுகொலை செய்வதாகவும், காவல்துறைதான் தங்களை வெளியேறச் சொன்னதாகவும் தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா.

சிபிஐ விசாரணை
கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தது தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டது. ஓய்வுபெற்ற நீதிபதி அஜய் ரஸ்தொகி தலைமையில் குழு அமைத்து விசாரணையை கண்காணிக்கவும் உத்தரவிட்டுள்ளது. இதற்காக கடந்த 10 நாட்களுக்கும் மேலாக ஆதவ் அர்ஜுனா டெல்லியில் முகாமிட்டு பணிகளை மேற்கொண்டிருந்தார்.
ஆதவ் அர்ஜுனா
இந்த உத்தரவுக்குப் பிறகு டெல்லியில் உச்சநீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜுனா திமுக அரசுக்கு எதிராக அடுக்கடுக்கான பல கேள்விகளை முன் வைத்தார். அப்போது எங்கள் தரப்பு வைத்த மூன்று கோரிக்கை உச்சநீதிமன்றம் ஏற்றுக் கொண்டுள்ளது. கரூரில் சம்பவம் நடந்த இடத்தில் பிரச்சாரம் செய்ய எங்களுக்கு அழுத்தம் கொடுக்கப்பட்டது. காவல்துறை சொன்ன இடத்தில் தான் விஜய் பிரச்சாரம் செய்தார். அதேபோல், விஜய் தாமதமாக வந்ததால் தான் கூட்ட நெரிசல் ஏற்பட்டது என்று கூறுவது தவறு. கரூரில் விஜய் பிரச்சாரம் செய்ய மதியம் 3 மணி முதல் இரவு 10 மணி வரை போலீஸ் அனுமதி அளித்திருந்தது. அந்த நேரத்துக்குள் தான் விஜய் பிரச்சாரம் செய்ய வந்தார்.
காவல்துறை அதிகாரிகள்
கரூருக்கு நாங்கள் வந்தபோது, கரூர் காவல்துறை எங்களை வரவேற்றது. வழக்கத்துக்கு மாறாக வேறு எந்த மாவட்டத்திலும் இல்லாது, கரூரில் மட்டும் எங்களை காவல்துறை வரவேற்றது ஏன்? கூட்ட நெரிசல் சம்பவம் ஏற்பட்டபோது காவல்துறை அதிகாரிகள் தான் எங்களை அங்கிருந்து வெளியேறும்படி உத்தரவிட்டனர். நாங்கள் அப்பவும் கூட கரூர் பார்டரில் காத்துக்கொண்டிருந்தோம். காவல்துறைதான் கலவரம் வரும்.. நீங்கள் வரவேண்டாம் என்றார்கள். ஆகையால் நாங்கள் அங்கிருந்து வெளியேறினோமே தவிர நாங்கள் தப்பியோடவில்லை.
திமுக அரசு
சம்பவம் நடந்த முதல் இரண்டு, மூன்று நாட்களுக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. நாங்களும் மனிதாபிமானமுள்ள மனிதர்கள்தான். இதை திமுக அரசு பயன்படுத்திக்கொண்டது. இந்த சம்பவத்தை வைத்து ஒரு கட்சியை அழிக்கும் ஜனநாயகப் படுகொலையை திமுக அரசு செய்து வருகிறது என்பதை நாங்கள் புரிந்து கொண்டோம். அதுமட்டுமல்ல தவெகவுக்கு உச்சநீதிமன்றத்தில் வழக்கறிஞர்கள் கிடைக்கக்கூடாது என பல்வேறு தொல்லைகளை திமுக அரசு கொடுத்தது. போராடி தான் வழக்கறிஞர்களை பிடித்தோம் என்ற அதிர்ச்சி தகவலை தெரிவித்தார்.