- Home
- Tamil Nadu News
- சென்னை தனி நீதிபதி விசாரணை குறித்து அதிருப்தி..! தவெக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
சென்னை தனி நீதிபதி விசாரணை குறித்து அதிருப்தி..! தவெக வழக்கில் உச்சநீதிமன்றம் அதிரடி!
கரூரில் தவெக தலைவர் விஜய் கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும், இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதியின் அதிகாரம் வரம்பு குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பியுள்ளது.

தவெக தலைவர் விஜய்
கரூரில் கடந்த செப்டம்பர் 27-ம் தேதி நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி சிறுவர்கள் உட்பட 41 பேர் உயிரிழந்தனர். மேலும் 100க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாடு முழுவதும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தியது. கரூர் சம்பவத்திற்கு விஜய் ததான் காரணம் என ஆளுங்கட்சி மற்றும் அதன் கூட்டணி கட்சிகள் குற்றம்சாட்டி வந்தனர். ஆனால் ஆளுங்கட்சியின் சதி இருப்பாக பாஜக, அதிமுக உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வந்தனர். இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான அனைத்து வழக்குகளும் மதுரை உயர்நீதிமன்ற அமர்வில் விசாரணை நடைபெற்று வந்தது.
நீதிபதி செந்தில் குமார்
இதனிடையே அரசியல் கட்சிகள் நடத்தும் ரோடு ஷோ'வுக்கு வழிகாட்டு நெறிமுறைகள் வகுக்க கோரி சென்னை வில்லிவாக்கத்தைச் சேர்ந்த தினேஷ் என்பவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி செந்தில் குமார் தவெக தலைவர் விஜய் கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். அதுமட்டுமல்லாமல் இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த வடக்கு மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு அமைத்தும் உத்தரவிட்டிருந்தார்.
உச்சநீதிமன்றம்
இந்நிலையில் சென்னை உயர் நீதிமன்றத்தின் இந்த உத்தரவுக்கு எதிராக தவெகவை சேர்ந்த ஆதவ் அர்ஜூனா உள்ளிட்ட 5 பேர் உச்சநீதிமன்றத்தில் முறையீடு செய்தனர். அஸ்ரா கார்க் தலைமையிலான சிறப்பு விசாரணைக் குழு அமைக்கப்பட்டு இருப்பது தவறு; வழக்கை சிபிஐக்கு மாற்ற வேண்டும் என்று கோரியிருந்தனர். இந்த வழக்கு நீதிபதிகள் மகேஸ்வரி மற்றும் அஞ்சாரியா அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர்.
உச்ச நீதிமன்றம் கேள்வி
இந்நிலையில் கரூர் சம்பவம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றம் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டுள்ளது. மேலும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை வரம்புக்குள் வரும் வழக்கை சென்னை உயர் நீதிமன்றத்தின் தனி நீதிபதி விசாரணை நடத்தியது குறித்து பல்வேறு கேள்விகளை உச்ச நீதிமன்றம் எழுப்பியுள்ளது. அதாவது கட்சிகள் பொதுக் கூட்டங்கள் நடத்த வழிகாட்டு நெறிமுறைகள் உருவாக்க உத்தரவிடக் கோரிய வழக்கில், தவெக எதிர் மனுதாரராக சேர்க்கப்படாத நிலையில், சென்னை உயர்நீதிமன்றம் தன்னிச்சையாக எப்படி உத்தரவு பிறப்பித்தது? தலைமை நீதிபதியின் அனுமதியின்றி, மதுரை அமர்வில் நடைபெறும் வழக்கை, சென்னையில் உள்ள தனி நீதிபதி அமர்வு விசாரிக்க எந்த தேவையும் இல்லை. ரிட் குற்ற வழக்காக எப்படி பதிவு செய்து விசாரணை மேற்கொண்டீர்கள்? இதுதொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தின் பதிவாளர் விளக்கம் அளிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.