- Home
- Tamil Nadu News
- சசிகலா பொதுக்கூட்டத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த வெள்ளதுரை? போட்டியிடும் தொகுதி இதுதானா?
சசிகலா பொதுக்கூட்டத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட்! யார் இந்த வெள்ளதுரை? போட்டியிடும் தொகுதி இதுதானா?
பசும்பொன்னில் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக சசிகலா கூறியிருந்தார். அதன்படி புதிய கட்சி கொடியை அறிமுகம் செய்து வைத்தார்.

சசிகலா அவ்வப்போது ஆலோசனை
பெங்களூரு சிறையில் வெளியே வந்த சசிகலா தொடர்ந்து அமைதி காத்து வந்தார். அதிமுக விரைவில் ஒற்றிணையும் அதற்கான ஏற்பாடுகளை செய்து வருவதாக தொடர்ந்து கூறி வந்தார். ஆனால் இதற்கு எடப்பாடி பழனிசாமி ஒருபோதும் சசிகலா, ஓபிஎஸ்-க்கு அதிமுகவில் இடமில்லை திட்டவட்டமாக கூறிவிட்டார். இந்நிலையில் பொறுமையை இழந்த சசிகலா இபிஎஸ், டிடிவி.தினகரனை காலி செய்ய 2026 சட்டமன்ற தேர்தலை குறிவைத்து தனது ஆதரவாளர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வந்தார்.
சசிகலா புதிய கட்சி
அதேபோல் போயஸ் கார்டனில் உள்ள சசிகலாவின் இல்லத்தில் ஓய்வு பெற்ற முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளத்துரை அவரை சந்தித்து பேசினார். இதனால் சசிகலா புதிய கட்சியை தொடங்கி அதிமுக மற்றும் அமமுக ஆகிய கட்சிகளுக்கு எதிராக குறிப்பிட்ட தொகுதிகளை வேட்பாளர் நிறுத்த உள்ளதாக தகவல் வெளியானது. இதனால் சசிகலா புதிய கட்சியை தொடங்குகிறாரா அல்லது திவாகரன் கட்சியுடன் இணைந்து போட்டியிட உள்ளரா என்ற எதிர்பார்ப்பு எழுந்தது.
என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் வெள்ளைதுரை
இந்நிலையில் பசும்பொன்னில் நடைபெறும் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவில் முக்கிய அறிவிப்பை வெளியிட இருப்பதாக சசிகலா கூறியிருந்தார். அதன்படி நேற்று பொதுக்கூட்டத்திற்கு அதிமுக கொடி கட்டிய வேனில் வந்த சசிகலாவுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. தொடர்ந்து இந்த பொதுக்கூட்டத்தில் என்கவுண்டர் ஸ்பெஷலிஸ்ட் முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளைதுரை வரவேற்புரை ஆற்றினார். அப்போது பொறுமை என்றால் பூமா தேவியை சொல்லுவார்கள். ஆனால் அந்த பூமா தேவிக்கு பொறுமையாக எப்படி இருப்பது என பாடம் நடத்துவதற்கு ஆற்றல்மிக்க எங்கள் தாயே என்று சசிகலாவுக்கு புகழாரம் சூட்டினார்.
இதனையடுத்து சசிகலா கட்சி கொடியை அறிமுகப்படுத்தி வைத்தார். அதில், அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படத்துடன் புதிய கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்க உள்ளதாக தெரிவித்தார்.
யார் இந்த வெள்ளதுரை?
கடந்த 1997ம் ஆண்டு புதுக்கோட்டை மாவட்டம் கீரனூர் காவல் நிலையத்தில் முதன்முதலில் உதவி ஆய்வாளராக பணியில் சேர்ந்தார். பின்னர் திருச்சிக்கு மாறுதலாகி பாலக்கரை காவல் நிலையத்தில் 1998 ஆம் ஆண்டு பணிபுரிந்த போது கோ.சி ஜான் என்ற ரவுடி போலீசாரை தாக்கி தப்ப முயன்ற போது துப்பாக்கியால் சுட்டு முதல் என்கவுண்டரை தொடங்கினார்.அதன் பின் 2003 ஆம் ஆண்டு சென்னை அயோத்தி குப்பம் வீரமணி என்கவுண்டர், 2004 ம் ஆண்டு சந்தன கடத்தல் வீரப்பன் என்கவுண்டர் செய்த சிறப்பு அதிரடிப்படையில் இவர் இடம்பெற்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 12க்கும் மேற்பட்ட என்கவுண்டர்களை வெள்ளத்துரை நிகழ்த்தியுள்ளார்.
அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டி
என்கவுன்ட்டர் ஸ்பெஷலிஸ்ட் என்று அழைக்கப்பட்ட ஏடிஎஸ்பி வெள்ளத்துரை கடந்த 2024ம் ஆண்டு பணி ஓய்வு பெறும் முந்தைய நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. வரும் சட்டமன்ற தேர்தலில் சசிகலா தொடங்கியுள்ள கட்சியில் அம்பாசமுத்திரம் தொகுதியில் முன்னாள் ஏடிஎஸ்பி வெள்ளைதுரை போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது.

