அடப்பாவிகளா... ஸ்டாலின் திட்ட முகாமிலேயே லஞ்சமா? காஞ்சிபுரத்தில் அதிர்ச்சி
உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமில் பட்டா மாற்றத்திற்கு லஞ்சம் வாங்கிய கிராம நிர்வாக அலுவலர் ராபர்ட் ராஜ் கைது செய்யப்பட்டார். காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ரூ.30,000 லஞ்சம் வாங்கியதற்காக அவரை கைது செய்தனர்.

ஒரே இடத்தில் 46 சேவைகள்
தமிழக மக்கள் பல்வேறு நலத்திட்டங்களை பெறுவதற்காக தினந்தோறும் அரசு அலுவலகங்களுக்கு அழைந்து திரிந்து வருகிறார்கள். குறிப்பாக ரேஷன் கார்டு, பட்டா இடமாற்றம், மகளிர் உரிமை தொகை, முதியோர் ஓய்வூதியம் பெறுவதற்காக ஏறி இறங்கி வருகிறார்கள்.
பல நாட்கள், பல வாரங்கள் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. இதனால் பொதுமக்கள் பாதிக்கப்படுவதை தவிர்க்கும் வகையில் உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தை தமிழக அரசு தொடங்கியுள்ளது. இந்த முகாமில் 46 சேவைகளுக்கு உடனடியாக தீர்வானது வழங்கப்பட்டு வருகிறது
உங்களுடன் ஸ்டாலின் முகாம்
தமிழகம் முழுவதும் 10ஆயிரம் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடத்தப்படவுள்ளது. பொதுமக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்ற இந்த முகாமில் தினந்தோறும் ஏராளமான மக்கள் குவிந்து வருகிறார்கள். இந்த நிலையில் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் அதிகாரி ஒருவர் லஞ்சம் பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஞ்சிபுரம் மாவட்டம் குன்றத்தூர், அருகே உள்ள தண்டலம் பகுதியைச் சேர்ந்தவர் ரவிபாரதி. இவர் தனது பெயரில் உள்ள இடம், மற்றும் இவரது மாமியார் காந்திமதி பெயரில் உள்ள இடம் இரு இடங்களில் ஒரு இடத்துக்கு பட்டா மாற்றமும், மற்றொரு இடத்துக்கு உட்பிரிவு பட்டா மாற்றமும் கோரி இரண்டாம் கட்டளை கிராம நிர்வாக அலுவலர் ராபர்ட் ராஜ் என்பவரை தொடர்பு கொண்டுள்ளார்.
பட்டா மாறுதல் - லஞ்சம் கேட்ட அதிகாரி
இந்த பணியை முடித்துக்கொடுக்க கிராம நிர்வாக அலுவலர் ராபர்ட் ராஜ் 80 ஆயிரம் ரூபாய் லஞ்சம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த ரவிபாரதி, காஞ்சிபுரம் லஞ்ச ஒழிப்பு போலீஸாருக்கு புகார் தெரிவித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து லஞ்ச ஒழிப்பு போலீஸார் வேதிப் பொருட்கள் தடவிய 30 ஆயிரம் ரூபாயை ரவிபாரதியிடம் கொடுத்து அதனை கிராம நிர்வாக அலுவலர் ராபர்ட் ராஜ்விடம் கொடுக்கும்படி அறிவுறுத்தியுள்ளனர். இதனையடுத்து குன்றத்தூர் அருகே கொழுமணிவாக்கம் கிராமத்தில் உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் நடைபெற்று வருகிறது.
உங்களுடன் ஸ்டாலின் முகாம் - அதிகாரி கைது
அந்த முகாமில் தான் இருப்பதாகவும் அந்த இடத்திற்கு வந்த பணத்தை கொடுக்கும் படி ராபர்ட் ராஜ் தெரிவித்துள்ளார். இதனையடுத்து ரவி பாரதி உங்களுடன் ஸ்டாலின் முகாமிற்கு சென்று அங்கிருந்த அரசு அலுவலர் ராபர்ட் ராஜிடம் பணத்தை கொடுத்துள்ளார்.
அப்போது மறைந்திருந்த டி.எஸ்.பி. கலைச்செல்வன் தலைமையிலான போலீஸார் ராபர்ட் ராஜ்யை கைது செய்தனர். இதனை தொடர்ந்து ராபர்ட் ராஜிடம் போலீசார் விசாரணை நடத்தி வரும் நிலையில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் விரித்த வலையில் அதுவும் உங்களுடன் ஸ்டாலின் முகாமில் வசமாக சிக்கி கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.