அதிமுகவுடன் கூட்டணி இல்லை.! எடப்பாடி கனவில் மண்ணை அள்ளிப்போட்ட விஜய்
தமிழக சட்டமன்ற தேர்தலில் தனித்துப் போட்டியிட விஜய் முடிவு செய்துள்ளார். அதிமுக, பாஜக உட்பட எந்தக் கட்சியுடனும் கூட்டணி இல்லை எனத் தெரிவித்துள்ளார். முதலமைச்சர் வேட்பாளர் த.வெ.க. என்பதில் உறுதியாக இருப்பதாகவும் கூறியுள்ளார்.

தமிழக அரசியல் களம்
தமிழக சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள அரசியல் கட்சிகள் தயாராகி வருகிறது. அந்த வகையில் இன்னும் 8 மாத காலமே உள்ள நிலையில் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தை தீவிரம் அடைந்துள்ளது. ஆளுங்கட்சியாக உள்ள திமுக தனது கூட்டணியில் உள்ள காங்கிரஸ், விடுதலை சிறுத்தைகள், கம்யூனிஸ்ட், மதிமுக, முஸ்லிம் லீக், மநீம உள்ளிட்ட கட்சிகளோடு தேர்தலை சந்திக்க திட்டம் வகுத்து வருகிறது.
மேலும் இந்த கூட்டணியில் தேமுதிக மற்றும் பாமகவின் ஒரு பிரிவு வரும் என தகவல் கூறப்படுகிறது. அதே நேரம் எதிர்கட்சியான அதிமுக இழந்த ஆட்சியை மீண்டும் பிடிக்க பலம் வாய்ந்த் கூட்டணியை உருவாக்க திட்டமிட்டு வருகிறது. அந்த வகையில் பாஜகவுடன் இனி கூட்டணியே இல்லையென தெரிவித்த அதிமுக, எதிர்ப்பு வாக்குகளை ஒருங்கிணைக்கும் வகையில் பாஜகவுடன் கூட்டணியை மீண்டும் உறுதி செய்துள்ளது.
அதிமுக- திமுக கூட்டணி நிலவரம்
இதே போல மற்ற கட்சிகளான பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளுடனும் ஆலோசனை நடத்தி வருகிறது. பாமகவில் அன்புமணி தரப்பு பாஜக- அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்பு உருவாகியுள்ளது. தேமுதிகவை பொறுத்தவரை ஜனவரி மாதம் எங்களது முடிவு அறிவிப்போம் என கூறிவிட்டது.
அடுத்தாக நடிகர் விஜய்யின் தவெகவை தங்கள் அணியில் இணைக்க எடப்பாடி முயன்று வருகிறார். ஆனால் கூட்டணி ஆட்சி, சரிபாதி தொகுதி பங்கீடு உள்ளிட்ட காரணங்களால் கூட்டணி உடன்படாமல் உள்ளது. எனவே தேர்தல் நெருக்கத்தில் விஜய்யை அதிமுக கூட்டணிக்கு இழுக்க கடைசி நேர பேச்சுவார்த்தை நடைபெறும் என கூறப்படுகிறது.
தேர்தல் களத்திற்கு தயாராகும் விஜய்
இந்த நிலையில் எடப்பாடி பழனிசாமிக்கு ஷாக் கொடுக்கும் வகையில் அதிமுகவுடன் கூட்டணி இல்லையென நடிகர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக்கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு வருகிற 21ஆம் தேதி மதுரையில் நடைபெறவுள்ளது.
முதலாவது மாநாட்டில் பல லட்சம் தொண்டர்கள் குவிந்த நிலையில் மதுரையில் இதை விட இன்னும் பல மடங்கு தொண்டர்கள் வருவார்கள் என தவெக தரப்பு கணக்கிட்டுள்ளது. இதனை தொடர்ந்து செப்டம்பர் மாதம் முதல் விஜய் தமிழகம் முழுவதும் மக்களை சந்திக்கும் பயணத்தை தொடங்கவுள்ளார்.
அதிமுகவுடன் கூட்டணி இல்லை
இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி செய்தியாளரிடம் விஜய் தேர்தல் கள நிலவரம் தொடர்பாக பேசியுள்ளார். அப்போது விஜய் பேசுகையில், மாற்றத்தை நோக்கியே என் பயணம் இருக்கிறது. எனக்கு எதிராக வரும் எந்த விமர்சனத்தை கண்டும் நான் கலங்குவதில்லை.
அதிமுக- பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டேன். முதலமைச்சர் வேட்பாளர் த.வெ.க. என்பதில் நாங்கள் எந்த சமரசமும் இல்லாமல் உறுதியாக இருக்கிறோம். இதில் எந்த மாற்றமும் இல்லை என தவெக தலைவர் விஜய் உறுதி பட தெரிவித்துள்ளார்.