FIFA World Cup Final: கூகுள், ஜியோ சினிமா ஆப், டுவிட்டர் என அனைத்திலும் அபார சாதனை! அசந்துபோன சுந்தர் பிச்சை
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை இறுதிப்போட்டி குறித்து கூகுளில் பயனாளர்கள் தேடியதுதான், கடந்த 25 ஆண்டுகளில் அதிகபட்சமான தேடல் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மேலும் ஜியோ சினிமா ஆப் அதிகமான வியூவர்ஷிப்பை பெற்று சாதனை படைத்துள்ளது.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் வெற்றிகரமாக நடந்து முடிந்தது. இறுதிப்போட்டியில் ஃபிரான்ஸை வீழ்த்தி அர்ஜெண்டினா உலக கோப்பையை வென்றது. அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான இறுதிப்போட்டி செம விறுவிறுப்பாக இருந்தது. ஒரு இறுதிப்போட்டிக்கான அனைத்து பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக அந்த போட்டி அமைந்தது.
செம கெத்தா திரும்ப வருவோம்.. ஃபிஃபா உலக கோப்பை தோல்விக்கு பின் கிலியன் எம்பாப்பே உற்சாகம்
இறுதிப்போட்டியின் முதல் பாதியில் அர்ஜெண்டினா 2 கோல்கள் அடிக்க, 2ம் பாதியில் ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாபே 2 கோல்கள் அடித்தார். இதையடுத்து ஆட்டம் டிராவானது. கூடுதல் நேரத்தில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், ஃபிரான்ஸின் எம்பாப்பேவும் தலா ஒரு கோல் அடிக்க, மீண்டும் ஆட்டம் 3-3 என டிராவானது. அதன்பின்னர் வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் ஃபிரான்ஸ் 2 கோல் மட்டுமே அடிக்க, 4 கோல்கள் அடித்து அர்ஜெண்டினா உலக கோப்பையை வென்றது.
ஃபிஃபா உலக கோப்பை ஃபைனல் கூகுள், டுவிட்டர், ஜியோ சினிமா ஆப் என அனைத்திலும் மாபெரும் சாதனையை படைத்துள்ளது. இறுதிப்போட்டி நடந்துகொண்டிருந்தபோதே, ஃபிரான்ஸ் கோல் அடித்ததற்கு பின் நொடிக்கு 24,400 டுவீட்கள் செய்யப்படுவதாக டுவிட்டர் நிறுவன உரிமையாளர் எலான் மஸ்க் டுவீட் செய்திருந்தார்.
இந்நிலையில், ஃபிஃபா உலக கோப்பை ஃபைனல் சமயத்தில் கோடிக்கணக்கானோர் அதுகுறித்து கூகுளில் தேடியுள்ளனர் என்று கூகுள் நிறுவன சி.இ.ஓ சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். கடந்த 25 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கூகுளில் உச்சபட்ச டிராஃபிக், ஃபிஃபா உலக கோப்பையின்போது தான் என்று சுந்தர் பிச்சை தெரிவித்துள்ளார். மேலும் மெஸ்ஸியை விட இந்த கோப்பையை தூக்க தகுதியான வீரர் இருக்க முடியாது என்று மெஸ்ஸிக்கும் அர்ஜெண்டினா அணிக்கும் சுந்தர் பிச்சை வாழ்த்து கூறினார்.
மேலும், ஃபிஃபா உலக கோப்பையை ஒளிபரப்பிய ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மற்றும் ஆன்லைனில் ஒளிபரப்பிய ஜியோ சினிமா ஆப் ஆகியவையும் மிகப்பெரிய வியூவர்ஷிப் சாதனையை படைத்துள்ளது. ஜியோ சினிமா ஆப்-பில் ஃபிஃபா உலக கோப்பை ஃபைனலை 3 கோடியே 20 லட்சம் பார்வையாளர்கள் கண்டுகளித்துள்ளனர். மொத்த உலக கோப்பை தொடரையும் 11 கோடிக்கும் அதிகமானோர் ஜியோ சினிமா ஆப்-பில் பார்த்துள்ளனர்.
ஃபிஃபா உலக கோப்பை போட்டிகளை ஸ்போர்ட்ஸ் 18 சேனல் மற்றும் ஜியோ சினிமா ஆப் ஆகியவற்றில் மொத்தமாக 40 பில்லியன் நிமிடங்கள் ரசிகர்கள் பார்த்துள்ளனர். இதுவும் மாபெரும் சாதனையாகும்.