துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக, லியோனல் மெஸ்ஸியிடமும், அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமும் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்.
கால்பந்து ஜாம்பவான் லியோனல் மெஸ்ஸி 3 நாள் பயணமாக இந்தியா வந்த நிலையில், கொல்கத்தாவில் மெஸ்ஸிக்கு வரவேற்பு கொண்டாட்டம் ரசிகர்களின் ரகளையில் போய் முடிந்தது. அதாவது இன்று காலை மெஸ்ஸி கொல்கத்தாவின் சால்ட் லேக் ஸ்டேடியத்துக்கு வந்தார். அங்கு மெஸ்ஸியை பார்ப்பதற்காக ரூ.5,000 முதல் ரூ.45,000 வரை பணம் கொடுத்து டிக்கெட்டுகள் வாங்கி மைதானத்துக்கு வந்திருந்தனர். காலை 11:15 மணிக்கு மைதானத்திற்கு வந்த மெஸ்ஸி மைதானத்தில் திரண்டிருந்த பல ஆயிரக்கனக்கான ரசிகர்களை பார்த்து கையசைத்து விட்டு வெறும் 20 நிமிடத்தில் அங்கு இருந்து சென்று விட்டார்.
மெஸ்ஸியை பார்க்க முடியாத ரசிகர்கள் கவலை
மெஸ்ஸியை மேற்கு வங்க அமைச்சர்களும், அவரது பிள்ளைகளும் சூழ்ந்து கொண்டதால் மைதானத்தில் இருந்த ரசிகர்களால் அவரை சரியாக பார்க்க முடியவில்லை. இதனால் ஆவேசம் அடைந்த ரசிகர்கள் மைதானத்தில் நாற்காலிகளையும், தண்ணீர் பாட்டில்களையும் தூக்கி வீசி எறிந்து ரகளையில் ஈடுபட்டனர். காவலர்கள் அவர்களை தடியடி நடத்தி கலைத்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணையில் களமிறங்கிய கொல்கத்தா காவல்துறை நிகழ்ச்சி ஏற்பாட்டாளரை அதிரடியாக கைது செய்தது.
மெஸ்ஸி, ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட மம்தா பானர்ஜி
இந்த நிலையில், இந்த சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மெஸ்யிடமும், கால்பந்து ரசிகர்களிடமும் மன்னிப்பு கேட்டுள்ளார். இது தொடர்பாக எக்ஸ் தளத்தில் பதிவிட்ட மம்தா பானர்ஜி, ''சால்ட் லேக் மைதானத்தில் இன்று நடந்த நிர்வாகக் குறைபாடுகளால் நான் மிகுந்த மன உளைச்சலுக்கும் அதிர்ச்சிக்கும் உள்ளாகியுள்ளேன்.
தங்களுக்குப் பிடித்தமான கால்பந்து வீரர் லியோனல் மெஸ்ஸியை ஒருமுறையாவது காண வேண்டும் என்பதற்காகக் கூடியிருந்த ஆயிரக்கணக்கான விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் ரசிகர்களுடன் நானும் அந்த நிகழ்வில் கலந்துகொள்வதற்காக மைதானத்திற்குச் சென்று கொண்டிருந்தேன்.
விசாரணை குழு அமைப்பு
அங்கு நடந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்திற்காக, லியோனல் மெஸ்ஸியிடமும், அனைத்து விளையாட்டு ஆர்வலர்கள் மற்றும் அவரது ரசிகர்களிடமும் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இந்த சம்பவம் குறித்து விசாரிக்க ஓய்வுபெற்ற நீதிபதி அஷிம் குமார் ரே அவர்களின் தலைமையில், தலைமைச் செயலாளர் மற்றும் கூடுதல் தலைமைச் செயலாளர், உள்துறை மற்றும் மலைப்பகுதி விவகாரத் துறை ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட விசாரணைக் குழுவை நான் அமைத்துள்ளேன்.
மீண்டும் இதுபோல் நடக்காது
இந்த ஆணையம் இந்தச் சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்தி தவறுக்கு காரணமானவர்களை கண்டறிந்து எதிர்காலத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்கத் தேவையான நடவடிக்கைகளைப் பரிந்துரைக்கும். மீண்டும் ஒருமுறை, அனைத்து விளையாட்டு ஆர்வலர்களுக்கும் மனமார்ந்த மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன்'' என்று தெரிவித்துள்ளர்.

