FIFA World Cup: செம ஃபைனல்.. ஜெயித்தது கால்பந்து விளையாட்டு தான்! உலக கோப்பையில் சத்குரு மண் காப்போம் பிரசாரம்
ஃபிஃபா கால்பந்து உலக கோப்பையை அர்ஜெண்டினா வென்ற நிலையில், அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான ஃபைனல் செம விறுவிறுப்பாக இருந்த நிலையில், ஜெயித்தது கால்பந்து விளையாட்டு தான் என்று சத்குரு கருத்து கூறியுள்ளார்.
22வது ஃபிஃபா கால்பந்து உலக கோப்பை தொடர் கத்தாரில் விறுவிறுப்பாக நடந்தது. அர்ஜெண்டினா - ஃபிரான்ஸ் இடையேயான இறுதிப்போட்டி மிகவும் பரபரப்பாக இருந்தது. ஒரு இறுதிப்போட்டிக்கான அனைத்து பரபரப்பும் விறுவிறுப்பும் நிறைந்ததாக அந்த போட்டி அமைந்தது.
இறுதிப்போட்டியின் முதல் பாதியில் அர்ஜெண்டினா 2 கோல்கள் அடிக்க, 2ம் பாதியில் ஃபிரான்ஸ் வீரர் கிலியன் எம்பாபே 2 கோல்கள் அடித்தார். இதையடுத்து ஆட்டம் டிராவானது. கூடுதல் நேரத்தில் அர்ஜெண்டினாவின் மெஸ்ஸியும், ஃபிரான்ஸின் எம்பாப்பேவும் தலா ஒரு கோல் அடிக்க, மீண்டும் ஆட்டம் 3-3 என டிராவானது. அதன்பின்னர் வழங்கப்பட்ட பெனால்டி ஷூட் அவுட்டில் ஃபிரான்ஸ் 2 கோல் மட்டுமே அடிக்க, 4 கோல்கள் அடித்த அர்ஜெண்டினா உலக கோப்பையை வென்று சாதனை படைத்தது.
FIFA World Cup ஃபைனலில் ஹாட்ரிக் கோல்.. கிலியன் எம்பாப்பே வரலாற்று சாதனை
ஃபிஃபா உலக கோப்பையை வென்ற அர்ஜெண்டினா அணிக்கும் மெஸ்ஸிக்கும் சர்வதேச அளவில் பலதரப்பினரும் வாழ்த்து கூறிவரும் நிலையில், சத்குரு உலக கோப்பை குறித்து டுவீட் செய்துள்ளார்.
மண் காப்போம் என்ற இயக்கத்தின் மூலம் மண் வளத்தை பாதுகாப்பதன் அவசியத்தை சர்வதேச அளவில் விவரித்து மண் வளத்தை காக்க பிரசாரம் செய்துவருகிறார் சத்குரு. அந்தவகையில், கோடிக்கணக்கான மக்கள் பார்க்கும் ஃபிஃபா உலக கோப்பை மூலம் மண் வளத்தை மேம்படுத்தும் விழிப்புணர்வை எற்படுத்தும் முனைப்பில், #ScoreForSoil என்ற ஹேஷ்டேக் மூலம், தங்களுக்கு பிடித்த கால்பந்து ஆட்டம், ஷாட்டை பதிவிடுமாறு சத்குரு வேண்டுகோள் விடுத்திருந்தார். இறுதிப்போட்டி அன்றும் கூட, கால்பந்துடன் நின்ற சத்குரு, அதையே வலியுறுத்தியும் இருந்தார்.
இந்நிலையில் இறுதிப்போட்டியில் வெற்றி பெற்று அர்ஜெண்டினா கோப்பையை வென்ற நிலையில், கோப்பையை அர்ஜெண்டினா ஜெயித்திருந்தாலும் கடைசியில் ஜெயித்தது என்னவோ கால்பந்து விளையாட்டு தான் என்று விளையாட்டு ஸ்பிரிட்டை உணர்த்தும் வகையில் பதிவிட்டார்.