சென்னை வியாசர்பாடியில் கஞ்சா போதையில் 17 வயதான சிறுவர்கள் 3 பேர் சேர்ந்து கத்தி முனையில் 65 வயது பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

 

சென்னை, வியாசர்பாடி, சத்தியமூர்த்தி நகரில் குடிசை மாற்றுவாரிய குடியிருப்புகள் உள்ளன. அங்கு வீடுகள் இல்லாத சில குடும்பங்கள் குடிசையில் வாழ்ந்து வருகின்றன. இந்த குடிசைப் பகுதியில் 65 வயதான பெண் ஒருவர் தனியாக வசித்து வருகிறார். இந்த நிலையில், நேற்றிரவு கஞ்சா போதையில் 17 வயதுடைய சிறுவர்கள் 3 பேர் அந்த குடிசைக்குள் புகுந்துள்ளனர். அருகில் இருப்பவர்கள் சத்தம் கேட்டு வெளியில் வந்த போது, அவர்களை கத்தியை காட்டி மிரட்டிய அச்சிறுவர்கள் கத்தி முனையில் 65 வயதான லட்சுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளனர்.

அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடிவந்து சிறுவனை மடக்கி பிடித்து எம்.கே.பி.நகர் போலீசில் ஒப்படைத்தனர். பாதிக்கப்பட்ட மூதாட்டி தற்போது ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். எம்.கே.பி நகர் அனைத்து மகளிர் போலீசார் 3 பேரில் ஒரு சிறுவனை பிடித்துள்ளனர். 

கஞ்சா, மது உள்ளிட்ட போதை வஸ்துகளை சப்ளை செய்யும் இடமாக இருப்பதாகவும், போதையில் அலையும் சிறுவர்கள் குடிசைப் பகுதியில் தங்களுக்கு அச்சுறுத்தலாக இருப்பதாகவும் பெண்கள் அச்சம் தெரிவிக்கின்றனர். விசாரணையில் அவன் எழில்நகரை சேர்ந்தவன் என்பது தெரிந்தது. இது குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து சிறுவனை கைது செய்து கெல்லீஸ் சீர்திருத்த பள்ளியில் அடைத்தனர்.