பாண்டியாவை பங்கம் செய்த நெட்டிசன்கள்: இனிமேல் கனவுல கூட கேப்டன்ஷிப் நினைக்க கூடாது!
மும்பை இந்தியன்ஸ் கேப்டனாக ஹர்திக் பாண்டியா தோல்வி அடைந்து வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் நெட்டிசன்கள் அவரை தாறுமாறாக விமர்சனம் செய்து எக்ஸ் பக்கங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஹர்திக் பாண்டியா கேப்டனாக நியமிக்கப்பட்டதிலிருந்து விமர்சனத்திற்கு உள்ளாகி வருகிறார். ஏற்கனவே கேப்டனாக பொறுப்பேற்று விமர்சனத்திற்கு உள்ளான நிலையில், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய போட்டியிலும் அடுத்தடுத்து தோல்வியும் அடைந்தார்.
அதுமட்டுமின்றி மைதானத்தில் ஹர்திக் பாண்டியா நடந்து கொள்ளும் விதமும் ரசிகர்களுக்கும், நெட்டிசன்களுக்கும் கோபத்தை உண்டாக்கியது. இவ்வளவு ஏன், மும்பை இந்தியன்ஸ் விளையாடிய 11 போட்டிகளில் 3ல் தோல்வியும், 8ல் வெற்றியும் அடைந்து புள்ளிப்பட்டியலில் 9ஆவது இடத்தில் உள்ளது. மேலும், பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்துள்ளது.
நேற்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை இந்தியன்ஸ் 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது. முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் 19.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 169 ரன்கள் எடுத்தது. பின்னர் பேட்டிங் செய்த மும்பை இந்தியன்ஸ் 18.5 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 145 ரன்கள் மட்டுமே எடுத்து 24 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவியது.
இந்த தோல்வியின் மூலமாக பிளே ஆஃப் வாய்ப்பையும் இழந்துள்ளது. ஆனால், கடந்த ஆண்டு நடைபெற்ற ஐபிஎல் தொடரின் 16ஆவது சீசனில் ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் 14 போட்டிகளில் 8 வெற்றி பெற்று புள்ளிப்பட்டியலில் 4ஆவது இடம் பிடித்து பிளே ஆஃப் சென்றது. இதில், எலிமினேட்டர் போட்டியில் லக்னோவை வீழ்த்தி 2ஆவது தகுதி சுற்று போட்டிக்கு சென்றது. அதில், குஜராத் டைட்டன்ஸ் அணியிடம் 62 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவி வெளியேறியது என்பது குறிப்பிடத்தக்கது.