பிரதமர் சில நேரம் நீருக்கடியில் சென்று டிராமா செய்கிறார்.. ராகுல்காந்தி விமர்சனம்.. பாஜக கொடுத்த பதிலடி..
குஜராத்தில் உள்ள துவாரகாவில் பிரதமர் மோடி நீருக்கடியில் பிரார்த்தனை செய்ததை நாடகம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
குஜராத்தில் உள்ள துவாரகாவில் பிரதமர் மோடி நீருக்கடியில் பிரார்த்தனை செய்ததை நாடகம் என்று ராகுல் காந்தி விமர்சித்துள்ளார். புனேவில் தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய ராகுல் காந்தி பிரதமர் மோடியை கடுமையாக விமர்சித்திருந்தார். நாட்டில் நிலவும் வேலையின்மை மற்றும் பணவீக்கம் போன்ற முக்கியமான பிரச்சினைகள் புறக்கணிக்கப்படுகின்றன என்று குற்றம் சாட்டய ராகுல்காந்தி, துவாரகாவில் நீருக்கடியில் பூஜை செய்ததற்காக பிரதமர் மோடியை ராகுல் காந்தி கடுமையாக சாடியிருந்தார்.
மேலும் பேசிய அவர் “ பிரதமர் மோடி சில நேரங்களில் பாகிஸ்தானைப் பற்றி பேசுவார், சில சமயம் தண்ணீருக்கு அடியில் நாடகம் ஆடுவார்.” என்று தெரிவித்தார். விவசாயிகள், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், எரிமலைகள் போன்ற பிரச்சனைகளைப் பற்றிப் பேசுவதற்குப் பதிலாக, பிரதமர் மோடியின் நீருக்கடியில் பூஜை போன்றவற்றில் மட்டுமே டிவி சேனல்கள் கவனம் செலுத்துகின்றன என்றும் அவர் கூறினார்.
ராகுல்காந்தியின் இந்த கருத்துக்கு பாஜக பதிலடி கொடுத்து வருகிறது. பாஜக தேசிய செய்தித் தொடர்பாளர் ஷெசாத் பூனவல்லா, “ சமீபத்தில், ராமர் மற்றும் சிவ பக்தர்களிடையே பிளவை உருவாக்கி வருகிறார் கார்கேஜி... 'சனாதனம் ஒரு நோய் என்று அவர்கள் கூறுகின்றனர். இவை அனைத்தும் காங்கிரஸிடமிருந்தும் அதன் கூட்டணிக் கட்சிகளிடமிருந்தும் வருகின்றன. பிரதமர் மோடியை எதிர்த்த காங்கிரஸ் இப்போது கிருஷ்ணரை எதிர்க்கிறது. தங்களை யதுவன்ஷி என்று கூறிக்கொள்ளும் கிலேஷ் யாதவ், தேஜஸ்வி யாதவ் ஆகியோர் ஏன் அமைதியாக இருக்கிறார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.
தொடர்ந்து பேசிய அவர் , “காங்கிரஸின் இந்து விரோத முகம் அம்பலமாகியுள்ளது. ஒருபுறம், கிருஷ்ண பக்தரான பிரதமர், துவாரகாவுக்குச் சென்று பிரார்த்தனை செய்கிறார். மறுபுறம், ராகுல் காந்தி இதை ஒரு நாடகம் என்று கேலி செய்கிறார்.” என்று தெரிவித்தார்.
முன்னதாக சில நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடியே இதுகுறித்து பேசியிருந்தார். அப்போது “ காங்கிரஸின் இளவரசர் வாக்குவங்கி அரசியலுக்காக துவாரகாவில் நான் செய்த பூஜையை கிண்டல் செய்தார்" என்று கூறினார்.
கடந்த பிப்ரவரி 25-ம் தேதி துவாரகா சென்ற பிரதமர் மோடி இதுகுறித்து தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். அவரின் "தண்ணீரில் மூழ்கியிருக்கும் துவாரகா நகரத்தில் பிரார்த்தனை செய்வது மிகவும் தெய்வீகமான அனுபவமாக இருந்தது. ஆன்மீக மகத்துவம் மற்றும் காலத்தால் அழியாத பக்தி கொண்ட ஒரு பண்டைய சகாப்தத்துடன் நான் இணைந்திருப்பதை உணர்ந்தேன். பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் நம் அனைவரையும் ஆசீர்வதிக்கட்டும்" என்று மோடி தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.