திருச்சி அருகே பொறியியல் கல்லூரி மாணவன் கொலை வழக்கில் 38 நாட்களுக்கு பிறகு குற்றவாளிகள் 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். 

திருச்சி மாவட்டம் லால்குடி அருகே திண்ணாகுளம் பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன். அவரது மகன் தமிழ்வாணன் சமயபுரம் தனியார் பொறியியல் கல்லூரியில் படித்து வந்துள்ளார். இவர் லால்குடி அருகேயுள்ள செவிலியர் கல்லூரியில் படிக்கும் மகேஸ்வரி என்ற பெண்ணை காதலித்து வந்தார். ஆனால் இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.  

இந்த சூழலில் கடந்த ஜனவரி 15-ம் தேதி இருவரும் இருசக்கர வாகனத்தில் சிறுகனூர் அருகே உள்ள மலைமாதா தேவாலயத்தில் இருவரும் சந்தித்து பேசியுள்ளனர். பின்னர் இருவரும் குமுளூர் வனப்பகுதியின் சாலையோரம் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு தனிமையில் பேசி வந்திருந்தனர். அப்போது, அங்கு வந்த அடையாளம் தெரியாத 4 பேர் தமிழ்வாணனை கொடூரமாக கத்தியால் கொடூரமாக குத்தியுள்ளனர். பின்னர் அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர். 

இதில் படுகாயமடைந்து ரத்து வெள்ளத்தில் துடித்த தமிழ்வாணனை திருச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். குற்றவாளிகளை பிடிக்க தனிபடை அமைத்து தேடி வந்தனர். இந்த கொலை தொடர்பாக துப்பு துலங்காமல் போலீசார் இருந்து வந்தனர். 

இந்நிலையில் லால்குடி அருகே புஞ்சை சங்கேந்தி கிராமத்தைச் சேர்ந்த தனபால், பிரதாப் உள்ளிட்ட 4 பேரிடம் சந்தேகத்தின் பேரில் போலீசார் விசாரணை நடத்தினர். இந்த விசாரணையில் பல திடுக்கிடும் தகவலை அவர்கள் தெரிவித்தனர். அந்த விசாரணையில், தமிழ்வாணனும் மகேஸ்வரியும் தனிமையில் இருந்த போது நாங்கள் அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்தோம். காதலர்களை ஏன் இங்கு நிற்கிறீர்கள் என கேட்ட போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. பின்னர் தமிழ்வாணனை கத்தியால் குத்தி கொலை செய்ததை கார்த்திகேயனும், மற்றும் பிரதாப் ஆகிய இருவரும் ஒப்புக் கொண்டுள்ளனர். இதனையடுத்து அவர்களை கைது செய்து சிறையில் அடைத்தனர்.