பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை செய்ய கோவை மாவட்ட மகளிர் நீதிமன்றம்  அனுமதி வழங்கியுள்ளது. 

நாட்டையே உலுக்கிய பொள்ளாச்சி பாலியல் விவகாரத்தில் திருநாவுக்கரசு, சபரிராஜன், மணிவண்ணன், வசந்தகுமார், சதீஷ் ஆகியோர் கைது செய்யப்பட்டு சேலம் சிறையில் அடைக்கப்பட்டனர்.  இதனையடுத்து, இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. 

2 ஆண்டிற்கு பிறகு இந்த வழக்கில் சிபிஐ போலீசார் பொள்ளாச்சி நகர அதிமுக மாணவரணி செயலாளர் அருளானந்தம் (34), ஹெரன்பால் (28), பாபு (29) ஆகியோரை கடந்த 5ம் தேதி கைது செய்யப்பட்டனர். சிறையில் அடைக்கப்பட்ட 3 பேரின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிவடைந்தது. இதையடுத்து அவர்கள் கோவை மகளிர் நீதிமன்றத்தில் நீதிபதி நந்தினி தேவி முன்பு ஆஜர்படுத்தப்பட்டனர். 3 பேருக்கும் பிப்ரவரி 3-ம் தேதிவரை நீதிமன்ற காவலை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார்.

அவர்கள் 3 பேருக்கும் ஆண்மை பரிசோதனை நடத்த அனுமதிக்க கோரி சிபிஐ சார்பில் ஏற்கனவே நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர். இந்த மனுவை நீதிபதி நந்தினி தேவி விசாரித்து அருளானந்தம் உள்பட 3 பேருக்கும் ஈரோடு அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை செய்ய உத்தரவிட்டார். விரைவில் இவர்களுக்கு அரசு மருத்துவமனையில் ஆண்மை பரிசோதனை நடத்தப்பட உள்ளது.