உசிலம்பட்டி அருகே கணவரை இழந்த பெண்ணை காதல் திருமணம் செய்து கொண்ட கல்லூரி மாணவர் வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே வலையபட்டியைச் சேர்ந்த குமார் மகன் யுகேஷ் (21). உசிலமபட்டி தனியார் கல்லூரியில் பிஎஸ்சி மூன்றாம் ஆண்டு பயின்று வரும் இவருக்கும், போதம்பட்டியைச் சேர்ந்த கணவரை இழந்த இந்திராவுக்கும் பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறி இருவரும் திருமணம் செய்து கொண்டனர். மேலும் இந்திராவுக்கு 2 குழந்தைகள் உள்ள இருந்த நிலையிலும் யுகேஷ் அவரை மறுமணம் செய்து கொண்டார். 

இந்நிலையில் இந்திராவின் முதல் கணவரின் சகோதரர் ராம்பிரபு என்பவர் உசிலம்பட்டி காவல் நிலையத்தில் இந்திராவும் 2 குழந்தைகளை காணவில்லை என்று புகார் அளித்திருந்தார். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த உசிலம்பட்டி போலீசார் இந்திரா மற்றும் அவரது இரு குழந்தைகளையும் தேடி வந்துள்ளனர்.

இந்நிலையில் யுகேஷ் கொடூரமான முறையில் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்தார். வீட்டின் முன்பு கடந்த யுகேஷை பார்த்த பொதுமக்கள் இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் கொலைக்கான காரணமான நபர்களை தீவிரமாக தேடி வருகின்றனர்.