மதுரையை அடுத்த சதுரகிரிமலை கோவில் தங்கும் விடுதியில் பெண் அதிகாரி குளிப்பதை அதிநவீன ‘பென்’ கேமரா மூலம் வீடியோ எடுத்த இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையரை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர். 

மதுரையை அடுத்த சாப்டூர் சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவில் மிகவும் புகழ்பெற்றது. இந்த கோவில் இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகத்தின் கீழ் உள்ளது. இந்த கோவிலுக்கு இந்து அறநிலையத்துறை மண்டல இணை ஆணையராக பச்சையப்பன் (55) உள்ளார். மதுரையில் அறநிலையத்துறை அலுவலகம் எல்லீஸ் நகரில் செயல்பட்டு வருகிறது. கடந்த ஜூன் 28-ம் தேதி, மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே சதுரகிரி மலைக்கோயிலில் உண்டியல் எண்ணும் பணி நடந்தது. இந்தப் பணியில் திண்டுக்கல் இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் ஒரு பெண் அதிகாரி ஈடுபட்டிருந்தார். பச்சையப்பனும் பணி நிமித்தமாக சதுரகிரி மலைக்கோயிலுக்கு சென்றிருந்தார். 

அப்போது கோயில் பகுதியில் உள்ள குளியலறையில் அந்த பெண் அதிகாரி குளித்துள்ளார். அந்த அறையின் ஆணியில் ஒரு பேன்ட் மட்டும் தொங்கியுள்ளது. அதில் சொருகி வைக்கப்பட்டு இருந்த பேனாவில் இருந்து சிவப்பு நிற ஒளி வந்துள்ளது. இதனால் சந்தேகமடைந்த பெண் அதிகாரி, பேனாவை எடுத்து பார்த்தபோது, அது அதிநவீன ‘பென் கேமரா’ என்பதும், குளியல் காட்சிகள் அதில் பதிவாகி இருந்ததும் தெரியவந்தது.

அது பச்சையப்பனின் பேன்ட்  என தெரிந்து மதுரை மாவட்டம், சாப்டூர் போலீஸ் ஸ்டேஷனில் பச்சையப்பன் மீது நேற்று முன்தினம் அவர் புகார் அளித்தார். புகாரின்பேரில் பச்சையப்பன் மீது 3 பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். நேற்று அதிகாலை 4.30 மணியளவில் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்த பச்சையப்பனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.