திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி, சிறுமியை கடத்தி பலாத்காரம் செய்த வாலிபரை, போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் கைது செய்தனர். இதற்கு உடந்தையாக இருந்த அவரது தாய் மற்றும் கள்ளக் காதலனை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

சென்னை நங்கநல்லூர் MGR நகரை  சேர்ந்தவர் சத்யா. இவரது மகன் தனுஷ் என்ற தனசேகரன். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தனுஷ் திருவான்மியூரில் உள்ள அரசு பள்ளியில் 9ம் வகுப்பு படித்தபோது, அதே பள்ளியில் படித்த, உறவினர் மகளான 13 வயது சிறுமியை காதலித்துள்ளார். 

பின்னர், இருவரும் பள்ளியில் இருந்து நின்றுவிட்டதாக கூறப்படுகிறது. ஆனாலும், வீட்டுக்கு தெரியாமல் தொடர்ந்து காதலித்து வந்துள்ளனர். 
இந்நிலையில், கடந்த சில தினங்களுக்கு முன் சிறுமி திடீரென காணாமல்  போயுள்ளார். உடனே சிறுமியின் பெற்றோர், சாஸ்திரி நகர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். 

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். அப்போது நங்கநல்லூரில் உள்ள தனுஷ் வீட்டில் சிறுமி தங்கி இருப்பது தெரிவந்தது. போலீசார் அங்கு சென்று இருவரையும் காவல் நிலையத்துக்கு அழைத்து வந்தனர். 

விசாரணையில், தனுஷின் அம்மா சத்தியா மற்றும் அவரது கள்ளக்காதலன் அன்பு என்ற அன்பழகன் ஆகிய 2 பேரும், சிறுமியிடம் ஆசைவார்த்தை கூறி தனுஷுடன் திருமணம் செய்து வைப்பதாக அழைத்துச் சென்று, கடந்த 4 நாட்களாக  தனுஷுடன் குடும்பம் நடத்த வைத்தது தெரியவந்தது. 

இதையடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து தனுஷ் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அம்மா சத்யா, 2வது கணவர் அன்பு என்ற அன்பழகன்  ஆகிய 3 பேரையும் கைது செய்தனர். பின்னர், சைதாப்பேட்டை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். சிறுமியை மீட்டு பெற்றோரிடம் ஒப்படைத்தனர்.