கள்ளக்குறிச்சி அருகே கல்லுரி மாணவி  பாழடைந்த கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டார்.  இந்த சந்தேக மரணம் குறித்து போலீசார் தீவிரமாக விசாரணை செய்து வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சி அருகே உள்ள மாதவச்சேரி கிராமத்தை சேர்ந்த கல்லுரி மாணவி ஒருவர் அங்குள்ள கல்லூரி ஒன்றில் இரண்டாம் ஆண்டு படித்து வந்துள்ளார்.

கடந்த வியாழக்கிழமை உறவினர்கள் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்ற மாணவி அன்று இரவுவரை வீடு திரும்பவில்லை. இதனால் பதற்றமடைந்த அவரது சித்தி பல இடங்களில் தேடியுள்ளார். ஆனால் வெள்ளிக்கிழமை காலை அதே பகுதியில் உள்ள தோட்டத்து கிணற்றில் மாணவி உயிரிழந்த நிலையில் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டு மாணவியின் உடல் மீட்கப்பட்டு  முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் உடற்கூறாராய்வுக்கு வைக்கப்பட்டுள்ளது. உடலில் வெளிக்காயங்கள் எதுவும் இல்லாத நிலையில்   உடற்கூறாராய்வுக்கு பின்தான் இது கொலையா இல்லை தற்கொலையா என தெரியவரும் என போலீசார் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில்,  இந்த சம்பவம் திட்டமிடப்பட்ட கொலை என அவரது சித்தி கூறியுள்ள நிலையில் மாணவியை தேடி சென்றபோது அந்த கிணற்றிற்கு அருகில் மூன்று பேர் சரக்கு போதையில்  நின்றிருந்தாகவும் இது குறித்து கேட்டதற்கு முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர்களை போலீசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.

உயிரிழந்த இந்த மாணவி எப்போதுமே செல்போனும் கையுமாக இருப்பார் என்றும், வாட்ஸ் அப்பில், எப்போதுமே ஆண் நண்பர்களுடன் உரையாடுவது வழக்கம் என்றும் சம்பவத்தன்று வீட்டில் வாட்ஸ்அப்பில் நீண்ட நேரம் சாட்டிங் செய்துகொண்டிருந்தை பார்த்த அவரது அண்ணன் திட்டியதாக சொல்லப்படுகிறது. இதனால் வீட்டை விட்டு மாணவி வெளியே சென்றதாக  சொல்லப்படுகிறது. 

இதனைத்தொடர்ந்து மாணவியின் செல்போனை கைப்பற்றி நடத்தப்பட்ட ஆய்வில் 15 வயதுடைய  சிறுவர்கள் இருவர் உள்பட 5 பேரிடம் அதிக நேரம் வாட்சப் சாட்டிங்கில்  ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த 5 பேரையும் பிடித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். அந்த 5 பேரில் 15 வயதுகொண்ட ஒரு சிறுவன் மாணவி கிணற்றில் சடலமாக மீட்கப்பட்டபோது கிணற்றின் அருகில் நின்றிருந்ததும் போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது. மேலும் அந்த செல்போனில்  பல செல்ஃபி  போட்டோக்களையும் போலீசார் கைப்பற்றியுள்ளனர்.