ஜீ தமிழ் தொலைக்காட்சியில் அதிக நபர்களால் விரும்பி பார்க்கப்படும் ‘சரிகமகப’ ரியாலிட்டி ஷோவின் அடுத்த சீசன் துவங்கும் தேதி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Saregamapa Season 5

ஜீ தமிழ் தொலைக்காட்சியில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அவர்களின் திறமைகளை ஊக்குவிக்கும் வகையில் நடனம், பாடல் என பல ரியாலிட்டி நிகழ்ச்சிகள் ஒளிபரப்பாகி வருகிறது. நாளுக்கு நாள் இந்த நிகழ்ச்சிகளின் பார்வையாளர்கள் உயர்ந்து கொண்டே வருவதால், ரியாலிட்டி ஷோக்களை ஒளிபரப்புவதில் தொலைக்காட்சி நிறுவனங்கள் அதிக கவனம் செலுத்தி வருகின்றன. குறிப்பாக ஜீ தமிழ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சரிகமப’ நிகழ்ச்சி பெரும் பார்வையாளர்களை பெற்று வருகிறது

புதிய சீசன் தொடக்கம்

கடந்த சில நாட்களுக்கு முன்பு ‘சரிகமப’ நிகழ்ச்சியின் சிறுவர்களுக்கான சீசன் 4 நிறைவடைந்த நிலையில், தற்போது பெரியவர்கள் பங்கு பெறும் சீசன் 5 தொடங்க இருப்பதை ஜீ தமிழ் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜீ தமிழ் தங்களது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெரியவர்களுக்கான சரிகமப சீசன் 5 வருகிற மே 24-ம் தேதி முதல் துவங்க இருப்பதாக கூறப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சி சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்களில் இரவு 7 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது.

நடுவர்கள் யார்?

புதிய சீசனில் வழக்கம் போல் அர்ச்சனா தொகுப்பாளினியாக களமிறங்க, பாடகர்கள் ஸ்ரீநிவாஸ், கார்த்திக், விஜய் பிரகாஷ் மற்றும் ஸ்வேதா மோகன் ஆகியோர் நடுவர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர். இந்த புது சீசனையும் ‘சரிகமப’ ரசிகர்கள் ஆர்வத்துடன் எதிர்நோக்கி காத்திருக்கின்றனர்.

View post on Instagram