திரை விமர்சர்கள் ரூ.25,000 வரை பணம் கேட்பதாக தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை கூறியிருக்கிறார்.
திரை விமர்சகர்கள் பற்றி தனஞ்ஜெயன் பேட்டி
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் கடந்த வாரம் சினிமா விமர்சகர்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் என்ற தலைப்பில் விவாதம் நடைபெற்றது. இதில் திரைப்படங்களுக்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் வழங்கச் சொல்லி நடிகர்கள் மட்டுமல்லாமல் தயாரிப்பாளர்கள் சார்பாக பணம் தருவதாக சினிமா விமர்சகர்கள் பேசியிருந்தனர். இது தற்போது இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் இது குறித்து தயாரிப்பாளர் தனஞ்ஜெயன் தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கிறார்.
படம் பார்க்காமலேயே விமர்சனம் செய்கிறார்கள்
அப்போது பேசிய தனஞ்செயன், ‘நீயா நானா’ நிகழ்ச்சியில் அவர்கள் கூறியது உண்மைதான். படம் பற்றி விமர்சனம் செய்வதற்கு பலரும் பணம் கேட்கின்றனர். இதனால் தான் சிறு பட்ஜெட் படங்களை யாரும் விமர்சனம் செய்வதில்லை. அதற்கு காரணம் முதலில் அந்த படங்களை பார்ப்பதற்கு விமர்சகர்களுக்கு நேரம் இல்லை. அப்படியே நேரம் செலவழித்து பார்த்தாலும் பின்னர் அதன் படம் குறித்து பேச வேண்டும். ஆனால் அந்த வீடியோவிற்கு வியூஸ் போகாது. எனவே யாரும் சிறிய பட்ஜெட் படங்களை பார்ப்பதில்லை என்றார். தற்போது தமிழ் சினிமாவின் நிலைமை வேறு மாதிரியாக சென்று கொண்டிருக்கிறது. ஒரு படம் ஓட வேண்டும் என்றால் youtubeல் முன்னணியில் இருக்கும் சிலரின் வாயில் அந்த படத்தின் பெயர் வர வேண்டும் என தயாரிப்பாளர்களே நினைக்கின்றனர்.
ப்ளூ சட்டை மாறன் மட்டுமே நேர்மையானவர்
இதன் காரணமாக சில யூடியூபர்களுக்கு பணம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் தயாரிப்பாளர்கள் இருக்கின்றனர். சில திரை விமர்சகர்கள் ஒரு படம் குறித்து விமர்சனம் செய்வதற்கு ரூ.15,000 முதல் ரூ.25,000 வரை படம் கேட்கின்றார்கள். ஆனால் இதில் விதிவிலக்கானவர் ப்ளூ சட்டை மாறன் தான். அவர் பணம் கொடுத்தாலும் வாங்க மாட்டார். பணம் கொடுக்கிறேன் என்று சொன்னாலே அவ்வளவுதான் அவரிடம் யாருமே நெருங்க முடியாது. அவர் மீது எனக்கு பல விமர்சனங்கள் உண்டு. ஆனால் பணம் வாங்கும் விஷயத்தில் அவர் கண்ணியமாக நடந்து கொள்கிறார். பெரிய படமோ சின்ன படமோ தன்னுடைய விமர்சனத்தை நேர்மையாக அவர் முன்வைக்கிறார். இப்படித்தான் ஒரு விமர்சகர் இருக்க வேண்டும்.
ஒரு படத்திற்கு ரூ.25,000 வரை கேட்கிறார்கள்
ஆனால் தற்போது விமர்சகர்கள் என்கிற பெயரில் இருப்பவர்கள் அனைத்தையும் பணமாகத்தான் பார்க்கிறார்கள். சின்ன படங்களை காசு வாங்கிக் கொண்டு புகழ்கிறார்கள். பெரிய படத்திற்கு பணம் தரவில்லை என்றால் படம் நன்றாக இல்லை என்று கூறி விடுகின்றனர். இவர்கள் சினிமாவிற்கு துரோகம் செய்கிறார்கள். படங்களை விமர்சனம் செய்து தான் பெரிய யூடியூபராக வளர்கிறார்கள். ஆனால் சோறு போட்ட சினிமாவுக்கு நேர்மையான விமர்சனத்தை சிலர் கொடுப்பதில்லை என்று தனஞ்ஜெயன் அந்த பேட்டியில் பேசியுள்ளார்.