நடிகர் விஷ்ணு விஷாலின் தம்பி கதாநாயகனாக நடிக்கும் ‘ஓஹோ எந்தன் பேபி’ திரைப்படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.
தம்பியை ஹீரோவாக அறிமுகம் செய்யும் விஷ்ணு விஷால்
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகராக இருப்பவர் விஷ்ணு விஷால். இவர் ‘வெண்ணிலா கபடிக் குழு’ படத்தின் மூலமாக ஹீரோவாக அறிமுகமானார். சில தோல்விப் படங்களை கொடுத்தாலும் நல்ல கதையம்சம் கொண்ட படங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார். இவர் நடிப்பில் வெளியான ‘ராட்சசன்’, ‘கட்டா குஸ்தி’, ‘லால் சலாம்’ ஆகிய படங்கள் வசூல் ரீதியான வெற்றி பெற்றது. இந்த நிலையில் விஷ்ணு விஷால் தன்னுடைய தம்பி ருத்ராவை ‘ஓஹோ எந்தன் பேபி’ என்கிற படத்தின் மூலமாக தமிழ் திரையுலகுக்கு அறிமுகப்படுத்துகிறார்.
‘ஓஹோ எந்தன் பேபி’ படத்தில் நடித்துள்ள நடிகர்கள்
விஷ்ணு விஷாலின் சொந்த தயாரிப்பு நிறுவனமான ‘விஷ்ணு விஷால் ஸ்டூடியோஸ்’ மற்றும் ‘ரோமியோ பிக்சர்ஸ்’ ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இந்தப் படத்தை, அறிமுக இயக்குனர் கிருஷ்ணகுமார் இயக்குகிறார். ஜென் மார்ட்டின் இசையமைக்கிறார். ருத்ராவிற்கு ஜோடியாக கதாநாயகியாக மிதிலா பால்கர் நடித்துள்ளார். மேலும் இந்த படத்தில் அஞ்சு குரியன், இயக்குனர் மிஷ்கின், ரெடின் கிங்ஸ்லி, கருணாகரன், பாலாஜி சக்திவேல், சுஜாதா பாபு, கீதா கைலாசம், நிர்மல் பிள்ளை, விஜய சாரதி, கஸ்தூரி உள்ளிட்ட மிகப்பெரிய நடிகர் பட்டாளமே நடித்துள்ளனர்.

ஒரு உதவி இயக்குனரின் கதை
படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சில நாட்களுக்கு முன்பு வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. அந்த வீடியோவில் உதவி இயக்குனராக நடித்துள்ள ருத்ரா, இயக்குனராக வேண்டும் என்கிற கனவுடன் இருக்கிறார். அதற்காக பல நடிகர்களை நேரில் சந்தித்து கதை சொல்லி வருகிறார். அப்போது நடிகராக வரும் விஷ்ணு விஷாலிடமும் கதையை சொல்கிறார். அப்போது விஷ்ணு விஷால் ரொமான்ஸ் கதை இல்லையா என்று ருத்ராவை பார்த்து கேட்கிறார். அதைத் தொடர்ந்து என்ன நடந்தது? ருத்ரா இயக்குனர் ஆனாரா? விஷ்ணு விஷாலை வைத்து படத்தை இயக்கினாரா என்பதுதான் படத்தின் மையக்கரு எனத் தெரிகிறது. சிறந்த பொழுதுபோக்காக இந்த படம் இருக்கும் என நம்பப்படுகிறது.

‘ஓஹோ எந்தன் பேபி’ ரிலீஸ் தேதி அறிவிப்பு
இந்த நிலையில் படத்தின் ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. வருகிற ஜூலை 11-ம் தேதி படம் வெளியாக இருப்பதாக போஸ்டர் வெளியிட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
