தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் விஷ்ணு விஷால். வெண்ணிலா கபடி குழு படம் மூலம் அறிமுகமான விஷ்ணு விஷால் தனது நடிப்பால் உயர்ந்து தற்போது சில படங்களை தயாரிக்கும் அளவிற்கு வளர்ந்துள்ளதுள்ளார். இந்நிலையில் சோசியல் மீடியாவில் வைரலான பகீர் மெசெஜ் ஒன்றை தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து எச்சரிக்கை விடுத்துள்ளார் விஷ்ணு விஷால்.  

அதில், ஒரு தமிழ் படத்துக்காக இந்த மெசேஜ் அனுப்பப்படுகிறது. இதற்கு பின் திறமையான குழு இருக்கிறது. புதிய தயாரிப்பாளர் தயாரிக்கிறார். அவர் உங்களை இந்தப் படத்தில் இணைத்துக் கொள்ள விரும்புகிறார். நல்ல சம்பளம் கிடைக்கும். விஷ்ணு விஷால் ஹீரோவாக நடிக்கிறார். சில காம்ப்ரமைஸும் தேவை. நீங்கள் விரும்பினால் மேற்கொண்டு தகவல்களை அளிக்கிறேன் என்று கூறப்பட்டுள்ளது.

அந்த மெசெஜ் ஸ்கீரின் ஷாட்டை பகிர்ந்துள்ள விஷ்ணு விஷால், எனது பெயரை தவறான காரணங்களுக்காக பயன்படுத்தும் நபர்களிடம் எச்சரிக்கையாக இருங்கள். இம்மாதிரி செய்பவர்களையும், இதுபோன்ற முட்டாள்தனங்களையும் கடுமையாக கண்டிக்கிறேன். தற்போது என் தயாரிப்பு நிறுவனம் தவிர, வேறு நிறுவனம் தயாரிக்கும் படங்கள் எதிலும் நான் நடிக்கவில்லை. இதுபற்றி விரைவில் போலீசில் புகார் அளிக்க இருக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.