Vishal: சென்சார் போர்டில் லஞ்சம் வாங்கிய விவகாரம்!! மத்திய அரசின் விரைவு நடவடிக்கைக்கு நன்றி கூறிய விஷால்!
மார்க் ஆண்டனி படத்திற்காக, மும்பை சென்சார் போர்டுக்கு லஞ்சம் கொடுத்ததாக விஷால் பரபரப்பு தகவலை வெளியிட்ட நிலையில், தற்போது அதற்கு உரிய நடவடிக்கை எடுத்த மத்திய அரசுக்கு விஷால் நன்றி தெரிவித்துள்ளார்.
இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில், செப்டம்பர் 15 ஆம் தேதி உலகம் முழுவதும் தமிழ், ஹிந்தி, தெலுங்கு, உள்ளிட்ட 5 மொழிகளில் பான் இந்தியா திரைப்படமாக வெளியானது 'மார்க் ஆண்டனி' வித்தியாசமான கதைக்களத்தில், டெலிபோன் மூலம் டைம் டிராவல் செய்வது போல், எடுக்கப்பட்டிருந்த இந்த படத்திற்கு, தொடர்ந்து ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. நடிகர் விஷாலை விட, எஸ்.ஜே.சூர்யா மாஸான நடிப்பால் ரசிகர்கள் மனதை கவர்ந்தார்.
100 கோடி வசூல் கிளப்பில் இணைந்துள்ள இந்த படத்திற்கு CBFC சான்றிதழ் பெற சுமார் 6.5 லட்சம் வரை லஞ்சமாக கொடுத்ததாக நடிகர் விஷால் தன்னுடைய சமூக வலைதளத்தின் மூலம் பரபரப்பு குற்றச்சாட்டு ஒன்றை வைத்தார். மேனகா என்கிற ஒரு பெண் இடைத்தரகர் மூலம், இரண்டு பேருக்கு இந்த தொகை வழங்கப்பட்டதாகவும் அதில் தெரிவித்திருந்தார். மேலும் இது போன்ற, மோசமான சம்பவத்தை நான் எதிர்கொண்டதில்லை என்றும், இதுகுறித்து மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் பிரதமர் மோடி நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை ஒன்றையும் வைத்தார்.
இந்நிலையில் விஷாலின் புகாரை தொடர்ந்து, உடனடியாக இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது மூத்த அதிகாரி ஒருவர் மூலம் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக, மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் ஒளிபரப்புத்துறை தன்னுடைய X பக்கத்தில் அறிவித்தது. இதை தொடர்ந்து மிக விரைவாக ஊழகுக்கு எதிராக நடவடிக்கை எடுத்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் ஒளிபரப்புத்துறைக்கு நன்றி தெரிவித்துள்ளார் விஷால்.
இதுகுறித்து விஷால் போட்டுள்ள பதிவில் கூறியுள்ளதாவது, "சென்சார் போர்ட் தரப்பில், லஞ்சம் பெற்ற அதிகாரிகள் மீது உடனடியாக நடவடிக்கை எடுத்துள்ள மத்திய தகவல் தொழில்நுட்ப மற்றும் ஒளிபரப்பு துறைக்கு தனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். பிரதமர் மோடி மற்றும் மகாராஷ்டிரா முதலமைச்சர் மற்றும் இந்த விவகாரத்தை வெளி கொண்டு வருவதில் உறுதுணையாக இருந்த அனைவருக்கும் நன்றி. என்னைப் போன்ற சாமானியர்களுக்கும், இதுபோன்ற பிரச்சனையால் பாதிக்கப்பட்ட பலருக்கு நீதி கிடைக்கும் என நம்புவதாக தெரிவித்துளளார்.