நீட் தேர்வால் மருத்துவப் படிப்பில் சேர இடம் கிடைக்காமல் தற்கொலை செய்து கொண்ட அரியலூர் மாணவி அனிதாவின் மரணத்தை மனதில் கொண்டு வரும் தேர்தலில் பொது மக்கள் வாக்களிக்க வேண்டும் என நடிகர் விஷால் தெரிவித்தார்.

நீட் தேர்வுக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து போராடியவர் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த மாணவி அனிதா.

இவர் மருத்துவ படிப்பில் சேர முடியாத வேதனையில் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இந்த மரணம் தொடர்பாக திரையுலகத்தைச் சேர்ந்தவர்கள தங்கள் எதிர்ப்பை தொடர்ந்து பதிவு செய்து வருகின்றனர்.

இந்நிலையில் சென்னை லயோலா கல்லூரியில் மாணவி அனிதாவுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில், திரையுலகினர் சார்பில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது.

இதில் பங்கேற்றுப் பேசிய நடிகர் சங்க செயலாளரும், நடிகருமான விஷால், வரும் தேர்தலில் இலவசங்களை எதிர்பார்க்காமல், அனிதாவின் மரணத்தை நினைவில் கொண்டு வாக்களிக்க வேண்டும் என கூறினார்.

மருத்துவம் படிக்க முடியாத, பொதுத்தேர்வுக்கு பயிற்சி பெற பணம் இல்லை என மாணவர்கள் கவலை பட வேண்டாம் என்றும் ,தன்னை தொடர்பு கொண்டால் உதவி செய்ய தயாராக இருப்பதாக விஷால் தெரிவித்தார்.