இயக்குநர் எழிலிடம் உதவியாளராக பணியாற்றிய ஆனந்தன் இயக்கத்தில் உருவாகி வரும் சக்ரா படத்தில் விஷால் நடித்து வருகிறார். விஷால் ஃபிலிம் ஃபேக்டரி இத்திரைப்படத்தை தயாரித்து வருகிறது. இந்நிலையில் “சக்ரா” படம் தீபாவளிக்கும் ஓடிடி-யில் வெளியாகும்  என விஷால் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சக்ரா படத்திற்கு தடை கோரி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. நடிகர் விஷால் - நடிகை தமன்னா நடிப்பில் வெளியான ஆக்‌ஷன் என்ற படத்தை ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனத்தின் ரவீந்திரன் தயாரித்திருந்தார்.

 படத்தில் நஷ்டம் ஏற்பட்டால் 8 கோடியே 29 லட்சத்து 57 ஆயிரத்து 468 ரூபாயை திருப்பித்தருவதாக கூறி, ரவீந்திரனுடன் நடிகர் விஷால் உறுதி அளித்து ஒப்பந்தம் செய்துள்ளார். ஆனால் விஷால் வாக்குறுதியை நிறைவேற்றாமல் இழுத்தடித்ததாக கூறப்பட்டது.  மேலும் தங்கள் நிறுவனத்திற்கு ஆனந்தன் கூறிய அதே கதையை தற்போது நடிகர் விஷால் தனது நிறுவனத்திற்கு சக்ரா என்ற பெயரில் எடுத்துள்ளதாகவும், அதனால் அந்த படத்திற்கு தடை விதிக்க வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்திருந்தனர். 

 

இந்த வழக்கில் கடந்த செப்டம்பர் 24ம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது, செப் .30-க்குள் இரு தரப்பினரும் பேச்சு நடத்தி சுமூக தீர்வு காண வேண்டும் என நீதிபதி உத்தரவிட்டிருந்தார். மேலும் சக்ரா திரைப்படத்தை ஓடிடி-நிறுவனங்களுக்கு விற்பனை செய்யும் நடவடிக்கையை நிறுத்தி வைக்க வேண்டும் என விஷால் தரப்புக்கு சென்னை உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்திருந்தது. ஆனால் அதன் பின்னர் நடந்த விசாரணையின் போது சக்ரா படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய விதிக்கப்பட்ட தடையை நீட்டிக்க சென்னை உயர் நீதிமன்றம் மறுத்துவிட்டது. 

 

இதையும் படிங்க: “பீட்டர் பாலை அன்னைக்கே செருப்பால அடிச்சு விரட்டியிருப்பேன்”... கொந்தளித்த வனிதா...!

இந்நிலையில் இன்று இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இருதரப்பு வாதங்களும் முடிவடைந்த பின்னர், ரூ.4 கோடிக்கான உத்தரவாதத்தை செலுத்தி விஷால் நடித்த சக்ரா படத்தை வெளியிடலாம் என நீதிபதி உத்தரவிட்டார். இதனையடுத்து 'சக்ரா' படத்தை ஓடிடி-யில் வெளியிட தடை விதிக்கக்கோரி ட்ரைடெண்ட் ஆர்ட்ஸ் நிறுவனம் தொடர்ந்த வழக்கு முடித்து வைக்கப்பட்டது.