’கேப்டனை நேரில் பார்த்தாலே மக்கள் எழுச்சியும் மகிழ்ச்சியும் அடைவார்கள் என்பதால் அவர் தேர்தல் சுற்றுப் பயணத்துக்கு தமிழகம் முழுவதும் வந்து கலந்துகொள்வார். ஆனால் அவர் மேடைகளில் பேசமாட்டார்’ என்கிறார் தே.மு.தி.க. துணைப் பொதுச்செயலாளர் சுதீஷ் .கேப்டனின் கணீர் குரலை இந்த தேர்தல் சமயத்தில் கேட்கமுடியாது என்பதால் அதிர்ந்துபோயுள்ளனர் தே.மு.தி.க. தொண்டர்கள்.

தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்தின் உடல்நலம் குறித்து நீண்ட நாட்களாகவே சர்ச்சைகள் நிலவி வரும் நிலையில், அவர் தேர்தல் பிரச்சாரத்தில் கலந்துகொள்வாரா என்ற சந்தேகம் அனைவர் மனதிலும் கேள்வியாக இருந்தது. இந்த சந்தேகங்களுக்கு நேற்று பத்திரிகையாளர் சந்திப்பில் விடை அளித்தார் சுதீஷ்.

'’பா.ஜனதா தலைமையிலான கூட்டணியில் சேருவதில் எங்களுக்கு எந்த பிரச்சனையும் இல்லை. தொகுதி எண்ணிக்கை ஒதுக்கீட்டில்தான் பிரச்சனை எழுந்தது. நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். மேல்சபையில் ஒரு இடம் ஒதுக்கி தரும்படி கோரிக்கை விடுத்தோம். ஆனால் எங்களது கோரிக்கை ஏற்கப்படவில்லை. என்றாலும் நாங்கள் விரும்பிய தொகுதிகளை அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தந்ததால் அதை ஏற்றுக்கொண்டோம்.

இதற்கிடையே பா.ஜனதா தலைவர்கள் எங்களுக்கு சில வாக்குறுதிகளை அளித்துள்ளனர். மத்தியில் மீண்டும் ஆட்சி அமைந்ததும் எங்களது கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று கூறியுள்ளனர். எனவே அந்த நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. கூட்டணி அமைத்த வி‌ஷயத்தில் எங்களை அனைவரும் பாராட்டுகிறார்கள். கட்சியின் நலன் கருதியே நாங்கள் முடிவுகளை எடுத்துள்ளோம். கூட்டணி பேசியபோது சில வி‌ஷயங்கள் நடந்தது. என்றாலும் பா.ஜனதா கூட்டணியில் நாங்கள் இருப்போம் என்பதை உறுதிப்படுத்தினேன்.

பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாசும், அவரது மகன் அன்புமணி ராமதாசும் கேப்டனை சந்தித்து பேசினார்கள். இதன் மூலம் இரு கட்சி தொண்டர்களும் தமிழகம் முழுவதும் அடிமட்ட அளவில் இணைந்து செயல்பட வாய்ப்பு உருவாகியுள்ளது. இந்த கூட்டணியில் முதலில் நாங்கள் பா.ஜனதா தலைவர்களுடன் பேசினோம். பிறகுதான் அ.தி.மு.க. வுடன் பேசத்தொடங்கினோம். இதனால் தான் கூட்டணியில் சில முடிவுகளை எடுப்பதில் தாமதம் ஏற்பட்டு விட்டது.

தமிழக அரசியலில் இப்போதும் நாங்கள்தான் மாற்று சக்தியாக இருக்கிறோம். தற்போது நடக்கும் தேர்தல் பிரதமரை தேர்வு செய்வதற்கான தேர்தல். மக்கள் விருப்பத்திற்கேற்ப எங்கள் கூட்டணி அமைந்துள்ளது. அடுத்த தேர்தல் பற்றி இப்போதே உறுதிபட கூற இயலாது. கூட்டணி மாறலாம். மாறாமலும் போகலாம். கேப்டனை முதல்-அமைச்சராக்கவே தே.மு.தி.க. தொடங்கப்பட்டது. அந்த இலக்கில் நாங்கள் உறுதியாக இருக்கிறோம்.

சில பிரச்சனைகள் அடிப்படையில் நாங்கள் முன்பு மோடி அரசை விமர்சனம் செய்து இருக்கலாம். ஆனால் அதே சமயத்தில் மோடி அரசின் நல்ல கொள்கைகளை மனம் திறந்து பாராட்டியுள்ளோம். தமிழ்நாடு, புதுச்சேரியில் 40 இடங்களிலும் வெற்றி பெறுவோம். நிச்சயமாக மத்திய அரசில் இடம் பெறுவோம். தற்போதைய அரசியல் சூழ்நிலையில் நாங்கள் மகிழ்ச்சியாகவே உள்ளோம்.

அ.தி.மு.க-பா.ஜனதா கூட்டணியில் நாங்கள் எங்களுக்குரிய தொகுதிகளை (வடசென்னை, கள்ளக்குறிச்சி, திருச்சி, விருதுநகர்) மிகவும் கவனமாக தேர்வு செய்துள்ளோம். 2014-ம் ஆண்டு தேர்தலில் நாங்கள் 14 தொகுதிகளில் போட்டியிட்டோம். பா.ம.க. 8 இடங்களில் போட்டியிட்டது. எனவே இந்த தடவை 10 இடங்களிலாவது போட்டியிட வேண்டும் என்று நினைத்தோம்.

ஆனால் பிப்ரவரி 20-ந் தேதியே பா.ம.க. மற்றும் பா.ஜனதாவுடன் அ.தி.மு.க. ஒப்பந்தம் செய்து விட்டது. இது எங்களுக்கு கடும் அதிருப்தியை தந்தது.2014-ம் ஆண்டு ஒரே நேரத்தில் எல்லா கட்சிகளுக்கும் ஒப்பந்தம் செய்ததைபோல இந்த தடவையும் தேர்தல் ஒப்பந்தம் செய்ய வேண்டும் என்று நாங்கள் கூறி வந்தோம். அது நடக்காமல் போய் விட்டது.

எங்களுக்கு தொகுதிகள் ஒதுக்குவதில் தாமதம் ஏற்பட்டது. தி.மு.க. தரப்பில் இருந்து அழைத்தனர். அவர்களிடம் நாங்கள் 8 தொகுதிகள் கேட்டோம். அதில் உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே கேப்டன் பா.ஜனதாவுடன் கூட்டணி வைக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். எனவே அவரது அறிவுரையை ஏற்று முடிவு எடுக்கப்பட்டது.

தி.மு.க.வுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தப்பட்ட வி‌ஷயத்தில் தி.மு.க.வினர் மிக மோசமான அரசியல் விளையாட்டை நடத்தி விட்டனர். துரைமுருகன் மீது நாங்கள் மிகுந்த மரியாதை வைத்துள்ளோம். அரசியலுக்காக அந்த நட்பு மாறாது. இப்போதும் நான் அவரை அண்ணன் என்றுதான் அழைக்கிறேன்.

தி.முக.விடம் நாங்கள் குழு அமைத்து பேசவில்லை. எங்கள் தரப்பில் இருந்து சென்றவர்கள் அவர்களது சொந்த வேலைக்காக சென்றனர். ஆனால் அரசியலில் அது வேறுமாதிரி பேசப்பட்டு விட்டது. விஜயகாந்த் இப்போது நல்ல உடல் நலத்துடன் இருக்கிறார். அவர் இந்த தேர்தலில் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பிரசாரம் செய்வார். ஆனால் பேச மாட்டார்.

அவர் தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் வந்தாலே போதும் என்று கட்சி நிர்வாகிகள் கருதுகிறார்கள். எனவே அவர் தொகுதி வாரியாக வரும்போது தே.மு.தி.க. தொண்டர்கள் மகிழ்ச்சியும், எழுச்சியும் அடைவார்கள். கேப்டன் விரைவில் தீவிர கட்சி பணிகளை மேற்கொள்வார். அவரது உடல்நலம் நன்கு தேறிவருகிறது. தே.மு.தி.க. வேட்பாளர்கள் பற்றி அவர்தான் முடிவு செய்வார். நான் போட்டியிடுவது பற்றியும் கேப்டன்தான் இறுதி முடிவு எடுப்பார்’என்றார் சுதீஷ்.