கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த வந்தபோது தி.மு.க தொண்டர்களின் கட்டுக்கு அடங்காத கூட்டத்தில் நடிகர் விஜயின் மனைவி சங்கீதா சிக்கிக் கொண்டார். நடிகர் விஜய் சர்கார் படத்தின் சூட்டிங்கிற்காக அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் இருக்கிறார். கலைஞர் மரணம் குறித்த தகவல் அறிந்ததும் அவர் சென்னை திரும்ப முடிவு செய்தார். ஆனால் அங்கிருந்து இந்தியா வருவதற்குள் கலைஞர் உடல் அடக்கம் செய்யப்பட்டுவிடும் என்கிற தகவல் கிடைத்த காரணத்தினால் விஜய் மாற்று யோசனை செய்தார். உடனடியாக தனது தந்தை எஸ்.ஏ.சந்திரசேகரை தொடர்பு கொண்ட விஜய் கலைஞர் உடலுக்கு தனது சார்பில் சென்று அஞ்சலி செலுத்துமாறு கூறியுள்ளார்.

ஆனால் எஸ்.ஏ.சந்திரசேகரோ தானும் வெளியூரில் இருப்பதாகவும் சென்னை திரும்பிக் கொண்டிருப்பதாகவும் ஆனால் உரிய நேரத்தில் சென்று அஞ்சலி செலுத்த முடியுமா என்று தெரியவில்லை என்று விஜயிடம் கூறியுள்ளார். இதனால் தான் விஜய் தனது மனைவி சங்கீதாவை அழைத்து நமது குடும்பத்தில் இருந்து யாரும் செல்லவில்லை என்றால் அது அரசியல் ஆகிவிடும், எனவே உடனே நீ சென்று கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்துமாறு சங்கீதாவிடம் விஜய் கூறியுள்ளார்.

உடனடியாக தனது முன்னாள் மக்கள் தொடர்பாளரும் தற்போது தயாரிப்பாளருமாக உள்ள பி.டி. செல்வக்குமாரிடம் கூறி தனது மனைவி சங்கீதாவை கலைஞர் உடலுக்கு அஞ்சலி செலுத்த ஏற்பாடு செய்யுமாறும் தெரிவித்துள்ளார். பி.டி. செல்வக்குமார் தனக்கு நெருக்கமான உதயநிதி மூலமாக சங்கீதாவை வி.ஐ.பி கேட் வழியாக ராஜாஜி ஹாலுக்கு அழைத்துச் சென்றார். ஆனால், அந்த சமயத்தில் கட்டுக்கடங்காத கூட்டம் வி.ஐ.டி வழியாகவும் நுழைந்தது.

இதனால் ஒரு அடி கூட முன்னேற முடியாமல் சங்கீதா தி.மு.க தொண்டர்களிடம் சிக்கிக் கொண்டார். அப்போது சற்று தொலைவில் நின்று கொண்டிருந்த உதயநிதியின் மனைவி கிருத்திகா சங்கீதாவை அடையாளம் கண்டு கொண்டார். உடனடியாக போலீசாரை அழைத்து சங்கீதாவை அருகே அழைத்து வருமாறு கூறினார் கிருத்திகா. போலீசாரும் விரைந்து சென்று தி.மு.க தொண்டர்களை அப்புறப்படுத்தி சங்கீதாவை மீட்டனர். பின்னர் அஞ்சலி செலுத்திவிட்டு சங்கீதா அங்கிருந்து புறப்பட்டுள்ளார்.