’பஞ்சாயத்து முடிஞ்சி செட்டில்மெண்டும் ஆயாச்சு. கிளம்பிப்போய் ‘பிகில்’படத்துக்கு அதிகாலைக் காட்சிக்கு டிக்கெட் எடுக்கிற வழியைப்பாருங்க’என்பது போல் இன்று மதியம் மூன்று மணியளவில் ஆளும் அதிமுகவினரும் விஜய் குழுவினரும் சமரசத்துக்கு வந்தனர். அதுவரை மவுனம் காத்து வந்த நிர்வாகத்தயாரிப்பாளர் இன்று மாலை 6 மணிக்கு பிகில் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என அறிவித்து அதன்படியே தற்போது படம் 25ம் தேதியன்று வெள்ளியன்று ரிலீஸாவதை உறுதி செய்திருக்கிறார்.

‘பிகில்’பட ஆடியோ நிகழ்ச்சியின் விஜய்யின் பேச்சுக்கு ரிலீஸ் சமயத்தில் கடுமையான ரியாக்‌ஷன் இருக்கும் என்று தமிழக மக்கள் கணித்தது பொய்யாகவில்லை. எல்லாம் சுமுகமாகப் போய்க்கொண்டிருந்தபோது சென்சார் மூலம் சிறிது சுணக்கம் காட்டிய எடப்பாடி அரசு பின்னர் அதிலிருந்து படத்தை விடுவித்து நேரடி மோதலில் இறங்கியிருந்தது. இந்த முறை மோதல் மிக சைலண்டாக நடந்தது. விஜய் கடைசிவரை சீனுக்குள் வரவேயில்லை.

இது தொடர்பாக முதல்வரை சந்திக்க தயாரிப்பாளர் தரப்பு எவ்வளவோ முயன்றும் அப்பக்கமிருந்து கிரீன் சிக்னல் கிடைக்கவில்லை என்ற நிலையில் இன்று மதியம் ஆஃப் த ரெகார்டாக சில சமரசங்கள் எட்டப்பட்டுள்ளதாகத் தெரிகிறது. அதை ஒட்டி தயாரிப்பாளரின் மகள் அர்ச்சனா கல்பாத்தி சரியாக மாலை 6 மணிக்கு பிகில் 25ம் தேதி தீபாவளிக்கு இரு தினங்கள் முன்னதாக ரிலீஸாவதை உறுதி செய்தார். இவர்களது அறிவிப்புக்காகவே காத்திருந்த ‘கைதி’படக்குழுவினரும் அதே 25ம் தேதியன்று தங்கள் படம் ரிலீஸாவதை உறுதி செய்துள்ளனர்.

இனி சென்னை உயர் நீதி மன்றத்தில் தேதி குறிப்பிடாமல் ஒத்தி வைக்கப்பட்ட உதவி இயக்குநரின் கதைத் திருட்டு வழக்கு நாளை தள்ளுபடி ஆகும். அதிகாலை, நள்ளிரவுக்காட்சிகளுக்கான அனுமதி சிக்கலின்றிக் கிடைக்கும். அடுத்த பட ஆடியோ வெளியீட்டு விழாவிலும் விஜய் அரசியல் பஞ்ச் டயலாக்குகள் பேசுவார். அமைச்சர்கள் கொதிப்பார்கள். அப்புறம் காம்ப்ரமைஸ் ஆவார்கள். மக்களாகிய நாம் மட்டும் ப்ளாக்கில் மூவாயிரத்திற்கும் ஐயாயிரத்துக்கும் டிக்கெட்டுகள் வாங்கி இளிச்சவாயர்களாகிக்கொண்டேயிருப்போம்.