’தளபதி 64’என்று பெயரிடப்பட்டுள்ள நடிகர் விஜய்யின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கவிருப்பதாக ஒரு மிரட்டலான செய்தி நடமாடிவருகிறது. ஆனால் இதுகுறித்து விஜய் சேதுபதி தரப்பு கருத்து எதையும் கூறவிரும்பவில்லை என்று தெரிகிறது.

’பிகில்’ படத்தின் இறுதிகட்டப் பணிகள் வேகமெடுத்துவரும் நிலையில் தீபாவளிக்குப் படம் வெளியாவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பிகில் படத்துடன் கார்த்தி நடிக்கும் ’கைதி’ திரைப்படம் வெளியாவது உறுதியாகியுள்ள நிலையில் விஜய் சேதுபதியின் சங்கத்தமிழன் படமும் இந்தப் பட்டியலில் இணையவுள்ளதாகக் கூறப்படுகிறது. இதில் ஒரு முக்கிய சுவாரசியமான செய்தி என்பது கைதி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ்தான் விஜய் 64 படத்தின் இயக்குநர்.

தீபாவளிக்குப் படங்கள் மூலம் மோதுவதைக் கடந்து விஜய்யும், விஜய் சேதுபதியும் படத்துக்குள் மோத தயாராகிவருவதுதான் தற்போதைய ஹாட் டாபிக். லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ‘விஜய் 64’ அறிவிப்பு சமீபத்தில் வெளியானது. இதில் வில்லனாக நடிக்க படக்குழு விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளது.முன்னணி நடிகராக வலம்வரும் விஜய் சேதுபதி ஆண்டுக்கு ஏழு, எட்டு படங்களில் நடித்துவருகிறார். நல்ல கதையம்சம் உள்ள படங்கள் என்றால் சிறப்புத் தோற்றத்திலும், வில்லன் கதாபாத்திரத்திலும் நடித்துவருகிறார்.சுந்தரபாண்டியன் படத்தில் சசிகுமாருக்கு வில்லனாக நடித்த விஜய் சேதுபதி, விக்ரம் வேதா படத்தில் மாதவனுக்கு வில்லனாக நடித்தார். பேட்ட படத்தில் ரஜினிக்கு எதிராக இவர் நடித்ததும் பெரும் வரவேற்பு பெற்றது. இந்த நிலையில் விஜய்க்கு வில்லனாக இவர் நடிப்பது உறுதியானால் இரு தரப்பு ரசிகர்களையும் அந்த அறிவிப்பு குஷிப்படுத்தும் என்பதில் சந்தேகமில்லை.

தமிழ் சினிமாவைப் பொறுத்தவரை சமீபகாலமாக வில்லன் கதாபாத்திரத்துக்கு கதாநாயகனுக்கு இணையான முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாகவே முன்னணி நடிகரான விஜய் சேதுபதியை வில்லன் நடிகராகக் கொண்டுவர ‘விஜய் 64’ படக்குழு முயற்சி செய்து வருகிறது.விஜய் சேதுபதி கைவசம் தற்போது ’லாபம்’, ’கடைசி விவசாயி’, ’மாமனிதன்’, ’க.பெ.ரணசிங்கம்’ உள்ளிட்ட படங்கள் வரிசை கட்டியுள்ள நிலையில் தெலுங்கில் ’உபென்னா’ படத்திலும் நடித்துவருகிறார். இன்னொரு பக்கம் தனது ‘பொன்னியின் செல்வன்’படத்துக்கு கால்ஷீட் கேட்டு மணிரத்னம் காத்திருக்கிறார். 

நமக்குக் கிடைத்த தகவலின்படி பெரும் கூட்டத்தில் நடிக்கக்கூடிய மணிரத்னம் படத்துக்கு நோ’ சொல்லிவிட்டு விஜய்க்கு வில்லனாக நடிப்பதையே விஜய் சேதுபதி அதிகம் விரும்புவார் என்று தெரிகிறது.