இதுவரை நடித்த படங்களுக்கு 4 முதல் 5 கோடிகளை சம்பளமாக வாங்கிக்கொண்டிருந்த நடிகர் விஜய் சேதுபதி, கடந்த ஒரு மாதகாலமாக தன்னை அணுகிவரும் தயாரிப்பாளர்களிடம் 10 கோடி கொடுத்தால் தான் நடிப்பேன் என்று திட்டவட்டமாகத் தெரிவித்து அதிர்ச்சி அளிக்கிறாராம். அவரது சமீபத்திய படங்கள் எதுவும் வசூலில் சாதிக்க நிலையில் இந்த சம்பள உயர்வு கொடூரமானது என்கிறார்கள் தயாரிப்பாளர்கள்.

கடந்த ஆண்டு வெளியான ‘96 படத்துக்குப் பின்னர் வெளியான விஜய் சேதுபதியின் ‘சீதக்காதி’,’சூப்பர் டீலக்ஸ்’,’சிந்துபாத்’ஆகிய படங்கள் அத்தனையும் வசூல் ரீதியாக தோல்விப் படங்களாகவே அமைந்தன. அதன் உச்சமாக கடந்த சனியன்று ரிலீஸான ‘சங்கத் தமிழன்’படு தோல்வி அடைந்து மண்ணைக் கவ்வியுள்ளது. இதையெல்லாம் பொருட்படுத்தாத வி.சே. தனது சம்பள உயர்வில் மிகக் குறியாக இருக்கிறாம். காரணம் படங்கள் தோற்றாலும் அவரைத் தேடிச்செல்லும் தயாரிப்பாளர்களின் கூட்டம்.

தெலுங்கில் சிரஞ்சீவியின் படத்தில் நடித்ததற்கு, விஜய்யுடன் வில்லன் வேடம் கட்டியதற்கு, இந்தியில்  ஆமிர்கான் படத்தில் நடித்ததற்கு அதிக சம்பளம் பெற்றுப் பழகிய விஜய் சேதுபதி, தான் ஹீரோவாக நடிக்கும் படங்களுக்கும் அதையே தொடர விரும்புவதுதான் இந்த சம்பள உயர்வுக்குக் காரணம் என்கிறார்கள். கடைசியாக வெளியான சங்கத் தமிழன் படத்தின் தமிழக தியேட்டர் உரிமையே வெறும் 10.5 கோடிக்குத்தான் வியாபாரமானது என்பதும் அதில் கால்வாசி கூட வசூல் தேறாது என்பதும் விஜய் சேதுபதிக்குத் தெரியமா என்பது தெரியவில்லை.