சர்கார் திரைப்படம் வெளியாகும் தீபாவளி தினத்தன்று கேரளாவில் உள்ள ஒரு திரையரங்கம் 8 காட்சிகளை திரையிட திட்டமிட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி விஜய் நடித்துள்ள சர்கார் திரைப்படம் தீபாவளி விருந்தாக திரைக்கு வரவுள்ளது. துப்பாக்கி, கத்தியைத் தொடர்ந்து இந்தப் படத்தில் மீண்டும் ஏ.ஆர்.முருகதாஸ், விஜய் கூட்டணி அமைந்துள்ளதால் படத்திற்கான எதிர்பார்ப்பு எகிறியுள்ளது. இதுமட்டும் அல்லாமல் மேலும் ஒரு சிறப்பாக உதயா, அழகிய தமிழ் மகன், மெர்சல் ஆகிய படங்களைத் தொடர்ந்து இந்தப் படத்திற்கும் இசை அமைத்திருப்பவர் இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான். விஜய்க்கு ஜோடியாக கீர்த்தி சுரேஷ் நடித்துள்ளார்.

  ராதாரவி, வரலட்சுமி சரத் குமார் ஆகியோர் முக்கிய வேடத்தில் நடித்துள்ளனர். படத்தின் கதை தொடர்பான சர்ச்சைகள் ஒருபுறம் ஓடிக் கொண்டிருக்க, சத்தமில்லாமல் சாதனைகளை நிகழ்த்தி வருகிறது சர்கார். டீசர் வெளியாகி கோடிக்கணக்கான முறை ரசிகர்களால் பார்க்கப்பட்டுள்ளது. பாடல்களும் மாபெரும் ஹிட்டடித்துள்ளன. விஜய்க்கு தமிழகத்தில் மட்டும் அல்லாமல் கேரளாவிலும் எக்கச்சக்க ரசிகர்கள் இருப்பது அனைவரும் அறிந்த ஒன்று தான், இதன் காரணமாக கேரளாவில் இப்படத்தின் விநியோகஸ்த உரிமை வேறு எந்த விஜய் படங்களும் நிகழ்த்தாத சாதனையாக அங்கு மிகப்பெரும் தொகைக்கு வாங்கப்பட்டது.

  பாகுபலி இரண்டுக்குப் பின்னர் இந்தப் படம் அதிக அளவு தொகைக்கு விநியோகஸ்த உரிமை பெற்ற படம் என்ற சாதனையையும் கேரளாவில் நிகழ்த்தியுள்ளது. அமெரிக்காவிலும் இப்படம் 162 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படி பல்வேறு சாதனைகளை புரிந்துள்ள சர்கார் படம் மேலும் ஒரு வரலாற்றுச் சாதனையை கேரளாவில் படைக்கவுள்ளது. அதாவது தீபாவளியன்று வெளியாகும் சர்காரை தொடர்ந்து 8 காட்சிகள் திரையிடுவதென திருச்சூரில் உள்ள ஒரு திரையரங்கம் முடிவு செய்துள்ளது. தலிகுளத்தில் உள்ள கார்த்திகா திரையரங்கம் தான் சர்கார் படத்தின் சாதனையை தனதாக்கிக் கொள்ளப் போகிறது. 

தீபாவளி அன்று காலை 5 மணிக்கு முதல் காட்சி தொடங்கும்.இதைத் தொடர்ந்து சற்றும் இடைவெளி இல்லாமல் காலை 8 மணி, 11.30 மணி, பிற்பகல் 3 மணி, மாலை 6.15 மணி, இரவு 9.15, 11.55 மற்றும் மறுநாள் அதிகாலை 2.45 மணி என தொடர்ந்து 8 காட்சிகளை திரையிடுகிறது கார்த்திகா திரையரங்கம். ஒரு திரையரங்கில் மட்டும் இதுபோன்று வேறு எந்தப் படமும் திரையிடப்பட்டதில்லை என்று கூறப்படுகிறது. கேரளாவில் விஜய் ரசிகர்கள் அதிகம் என்பதால் அவர்களை குஷிப்படுத்துவதற்காக இந்த முடியை திரையரங்கம் எடுத்துள்ளதாகவும் கூறப்படுகிறது.