பிகில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரில் கறி கட்டைமேல் கால்வைத்து தங்களை இழிவுபடுத்தும் வகையில் அமைந்திருப்பதாகக் கூறி போராட்டத்தில் ஈடுபட்ட இறைச்சி வியாபாரிகளை சமாதானம் செய்யும் வேலையில் விஜய் ரசிகர்கள் இறங்கியுள்ளனர் .

அட்லீ இயக்கத்தில் விஜய் நடித்திருக்கும் பிகில் படத்தில் நயன்தாரா, இந்துஜா, ரெபா மோனிகா, ஜாக்கி ஷெராப், விவேக், யோகிபாபு, கதிர் போன்ற பலர் நடித்துள்ளனர். தீபாவளி ரிலீஸாக வர இருக்கும் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த ஜூன் மாதம் 21-ஆம் தேதி வெளியானது.

இந்நிலையில் பிகில் படத்தின் போஸ்டர் தங்களை இழிவுபடுத்தும் விதத்தில் அமைந்திருப்பதாகக் கூறி கோயம்புத்தூர் கறிக்கடை உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். 

இந்தியாவில் உள்ள இறைச்சி வியாபாரிகள் கறி வெட்டும் கட்டையைத் தொட்டு வணங்கிதான் வேலை செய்யத் தொடங்குவார்கள். நாங்கள் உயர்வாக மதித்து தொழில் செய்யும் கறி வெட்டும் கட்டை மீது செருப்புக்காலை வைத்து போஸ்டர் வெளியிட்டு மொத்த வியாபாரிகளையும் அவமரியாதை செய்துவிட்டார்கள்.’ என்று அவர்கள் சார்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டதோடு கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனுவும் அளிக்கப்பட்டது.

தற்போது இறைச்சி வியாபாரிகளுக்கு இறைச்சி வெட்டும் மரமுட்டிகளை இலவசமாக வழங்கி அவர்களை சமாதானம் செய்யும் முயற்சியில் விஜய் ரசிகர்கள் இறங்கியுள்ளனர். மேலும் “தளபதி விஜய், இறைச்சி வியாபாரிகளை அவமதிக்கும் வகையில் எப்போதும் நடந்து கொள்ள மாட்டார். படம் பார்த்தால் உங்களுக்கே இது புரியும்” என்று கூறி இறைச்சி வியாபாரிகளை சமாதானம் செய்துள்ளனர். இதனைத் தொடர்ந்து பிகில் படத்திற்கு எதிராக இனி போராட்டம் செய்ய மாட்டோம் என்று இறைச்சி வியாபாரிகள் தரப்பில் இருந்து உறுதி மொழி கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.