பஹல்காமில் நடந்த பயங்கரவாத தாக்குதல் குறித்து தான் வெளியிட்ட பதிவை தவறாக புரிந்து கொண்டவர்களின் கவனத்திற்காக மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார் விஜய் ஆண்டனி.
Vijay Antony Releases Sensational Statement: "For those Who have misunderstood My message!" : காஷ்மீர் மாநிலத்தில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத் தளங்களில் ஒன்று பஹல்காம். அங்குள்ள பைசரன் வேலியில் கடந்த ஏப்ரல் 22ந் தேதி மதியம் 2:30 மணியளவில் பயங்கரவாதிகள் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அங்கு வந்திருந்த சுற்றுலாப் பயணிகள் உள்பட 28 பேர் உயிரிழந்தனர். இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த தாக்குதல் சம்பவத்திற்கு பலரும் தங்கள் கண்டனங்களை தெரிவித்த வண்ணம் உள்ளனர்.
பாகிஸ்தானில் 50 லட்சம் இந்தியர்கள்
இதனிடையே பஹல்காம் தாக்குதல் சம்பவம் குறித்து இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி தன்னுடைய எக்ஸ் தள பக்கத்தில் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு இருந்தார். அந்த அறிக்கையில், “காஷ்மீரில் உயிரிழந்த சகோதரர்களுக்கும், அவர்களின் குடும்பங்களுக்கும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன்.
அதே சமயத்தில் பாகிஸ்தானில் வசிக்கும் 50 லட்சம் இந்தியர்களையும், பாகிஸ்தான் பொதுமக்களையும் நாம் கருத்தில் கொள்ள வேண்டும். அவர்களும் நம்மைப் போலவே அமைதியையும், மகிழ்ச்சியையும் விரும்புகிறார்கள். வெறுப்பைக் கடந்து மனிதத்தை வளர்ப்போம்” என அந்த அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையும் படியுங்கள்... பஹல்காம் குண்டு சத்தம் கேட்ட உடன் பட்டாசுதான் வெடிக்கிறது என நினைத்தோம்-உயிர் பிழைத்த தமிழர் பேட்டி!
விஜய் ஆண்டனி விளக்கம்
விஜய் ஆண்டனியின் இந்த அறிக்கைக்கு சிலர் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். பாகிஸ்தானில் 50 லட்சம் இந்தியர்களா... உண்மை தெரியாமல் பேசாதீர்கள் என்று கூறி அவரை கடுமையாக சாடி வந்தனர். இந்த நிலையில், தன்னுடைய பதிவை தவறாக புரிந்து கொண்டவர்களுக்காக இன்று மீண்டும் ஒரு அறிக்கையை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார் விஜய் ஆண்டனி.
அந்த அறிக்கையில், “காஷ்மீரில் நடந்த கொடிய படுகொலையை செய்த அந்த மிருக வெறி கொண்ட பயங்கரவாத கூட்டத்தின் நோக்கம் நம் ஒற்றுமையை சிதைப்பதே ஆகும். இந்திய அரசும் நாமும், நம் வலிமையான கரங்களால் நம் இறையான்மையை பாதுகாப்போம்” என குறிப்பிட்டுள்ளார் விஜய் ஆண்டனி. இதைப்பார்த்த நெட்டிசன்கள் முந்தைய அறிக்கையிலேயே இதே மாதிரி தெளிவா போட்டிருக்கலாம் என கூறி வருகின்றனர்.
இதையும் படியுங்கள்... பஹல்காம் தாக்குதலுக்குப் பின் 16 பாகிஸ்தான் யூடியூப் சேனல்களுக்குத் தடை
