நடிகை வனிதா விஜயகுமார் தனது மகள் ஜோவிகாவுடன் இணைந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை சந்தித்துள்ளார். அந்த புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளன.
வனிதாவின் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ திரைப்படம்
தமிழ் திரையுலகில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் நடிகர்கள் விஜயகுமார் - மஞ்சுளாவின் மூத்த மகளான வனிதா, நீண்ட இடைவெளிக்குப் பின்னர் இயக்குனர் மற்றும் தயாரிப்பாளராக தமிழ் திரையுலகில் ரீ எண்ட்ரி கொடுத்துள்ளார். தற்போது இவர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. திரைப்படம் மஞ்சுளாவின் பிறந்தநாளான ஜூலை 4-ம் தேதி வெளியாக உள்ளது. படம் வெளியாவதை முன்னிட்டு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து வனிதா வாழ்த்துக்களை பெற்றுள்ளார்.
மீண்டும் திரைத்துறையில் வனிதா
வனிதா விஜயகுமார் ‘சந்திரலேகா’ படத்தில் விஜய் உடன் நடித்ததன் மூலமாக திரைத்துறையில் அறிமுகமானார். பின்னர் ராஜ்கிரணுக்கு ஜோடியாக ‘மாணிக்கம்’ உள்ளிட்ட சில படங்களில் நடித்திருந்தார். அவருக்கு நடிகர் ஆகாஷுடன் திருமணம் ஆனது. திருமணத்திற்கு பின்னர் திரைத்துறையில் இருந்து விலகிய அவர் பின்னர் மீண்டும் வைரலாகத் தொடங்கினர். வனிதாவின் விவாகரத்து, மீண்டும் திருமணம் என அவரின் ஒவ்வொரு நடவடிக்கைகளும் இணையத்தில் வைரலானது. சிறிது காலம் அமைதியாக இருந்த அவருக்கு விஜய் டிவியின் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி மீண்டும் திரை வெளிச்சத்தைக் கொடுத்தது.
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ வெளியீடு எப்போது?
பிக் பாஸ்க்குப் பின்னர் அதே விஜய் டிவியில் ‘குக் வித் கோமாளி’ உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கெடுத்தார். இதைத் தொடர்ந்து அவருக்கு படங்களில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்து வருகிறது. பிரசாந்த் நடித்த ‘அந்தகன்’ படத்தில் சமுத்திரக்கனியின் மனைவியாக நடித்திருந்தார். தற்போது வனிதா இயக்குனராகவும் அவதாரம் எடுத்துள்ளார். அவர் இயக்கி நடித்துள்ள திரைப்படம் தான் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’. இந்தப் படத்திற்கு வனிதாவே திரைக்கதை எழுதி, இயக்கி, தயாரித்துள்ளார். கடந்த சில மாதங்களுக்கு முன்பு இந்த படத்தின் டீசர் வெளியாகி வரவேற்பை பெற்றிருந்த நிலையில், படம் ஜூன் மாதம் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
ரஜினிகாந்துடன் வனிதா சந்திப்பு
ஆனால் சில காரணங்களால் படத்தின் வெளியீடு தள்ளிப் போனது. இந்த நிலையில் வனிதா தனது தாயாரின் பிறந்தநாளான ஜூலை நான்காம் தேதி வெளியாகும் என அறிவித்துள்ளார். சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை வீட்டிற்குச் சென்ற அவர், ரஜினியின் கைகளால் படத்தின் வெளியீட்டு தேதி போஸ்டரை வெளியிட்டு அறிவித்துள்ளார். இந்த புகைப்படங்களை வனிதா தனது சமூக வலைதளப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.