தேவயானியையும் தன்னையும் ஒப்பிட்டு பேசுவது, தேவயானி மகளுடன் தன் மகளை ஒப்பிட்டு பேசுவது போன்ற செயல்களை செய்ய வேண்டாம் என்று நடிகை வனிதா விஜயகுமார் பேட்டி ஒன்றில் கூறியிருக்கிறார்.
Vanitha Talking About Devayani
தமிழ் திரையுலகில் சர்ச்சை நாயகியாக வலம் வருபவர் வனிதா விஜயகுமார். பழம்பெரும் தம்பதிகளான விஜயகுமார் மற்றும் மஞ்சுளா தம்பதிகளின் மூத்த மகளான வனிதாவின் திருமண வாழ்க்கையில் பல சர்ச்சைகள் எழுந்தது. முதல் இரண்டு திருமணங்கள் விவாகரத்தில் முடிந்த நிலையில், மூன்றாவதாக ராபர்ட் மாஸ்டரை காதலித்து வருவதாக தகவல்கள் வெளியானது. ஆனால் திடீரென அவர் பீட்டர் பால் என்பவரை கிறிஸ்தவ முறைப்படி திருமணம் செய்து கொண்டார். ஆனால் பீட்டர் பாலுக்கு ஏற்கனவே திருமணமாகி குழந்தைகள் இருந்த காரணத்தினால் அவரையும் பிரிய வேண்டிய சூழல் ஏற்பட்டது. தற்போது தனது இரு மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார் வனிதா.
வனிதா இயக்கியுள்ள ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படம்
வனிதா விஜயகுமாருக்கு விஜய் தொலைக்காட்சியில் குக் வித் கோமாளி மற்றும் பிக் பாஸ் ஆகிய நிகழ்ச்சிகளில் பங்கெடுக்கும் வாய்ப்பு கிடைத்தது. சில காலமாக திரைத்துறையில் இருந்து ஒதுங்கி இருந்த அவருக்கு இந்த இரண்டு நிகழ்ச்சிகளும் மீண்டும் வெளிச்சத்தை கொடுத்தது. பின்னர் பிக் பாஸ் நிகழ்ச்சி குறித்து விமர்சனம் செய்து தனியார் தொலைக்காட்சிகளில் பேட்டி அளித்து பிரபலமானார். தற்போது மீண்டும் அவர் திரைத்துறைக்கு திரும்பி இருக்கிறார். அவர் ‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ என்ற படத்தை எழுதி இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் வனிதாவின் முன்னாள் காதலரான ராபர்ட் மாஸ்டர், நடிகை ஷகிலா, கணேஷ், ஆர்த்தி கணேஷ், பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன், ஸ்ரீமன், செஃப் தாமு உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஸ்ரீகாந்த் தேவா இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார்.
‘மிஸஸ் அண்ட் மிஸ்டர்’ படம் பற்றிய பேசிய வனிதா
இந்தப் படத்தை வனிதா ஃபிலிம்ஸ் ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் சார்பில் அவரது மூத்த மகள் ஜோவிகா விஜயகுமார் தயாரித்துள்ளார். இந்த படம் ஜூலை நான்காம் தேதி தியேட்டரில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. படத்தின் புரமோஷன் பணிகளில் படக்குழுவினர் தீவிரம் காட்டி வருகின்றனர். இந்த நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டி அளித்துள்ள வனிதா இந்த படம் குறித்து பல தகவல்களை பகிர்ந்து கொண்டார். டிரெய்லரில் இந்த படத்தின் பெரும்பாலான காட்சிகள் ஆபாசமாக இருப்பதாக பலரும் கூறுகின்றனர். ஆனால் இதில் எந்த ஆபாசமும் கிடையாது. பாக்கியராஜ் படங்களில் வருவது போல எதார்த்தமான கதையை இந்த படத்தில் வைத்துள்ளேன். இது ஒரு மார்டன் பாக்யராஜ் படம் போல இருப்பதாக படத்தை பார்த்த ஒரு சிலர் என்னிடம் கூறினர். அதை நினைத்து நான் மிகவும் பெருமை கொள்கிறேன்.
தேவயானி என்னுடைய நல்ல நண்பர்
பாக்யராஜ் படங்களில் பெரும்பாலும் வெகுளித்தனம் இருக்கும். ‘முந்தானை முடிச்சு’ படத்தில் கூட ஒரு குடும்பத்தில் குழந்தை பிறப்பதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதைத்தான் காட்டியிருப்பார். இது மிகவும் யதார்த்தமான கதை. அதைப் போலத்தான் நானும் என் படத்தில் காட்டி இருக்கிறேன். ‘முந்தானை முடிச்சு’ படங்கள் வெளியான காலத்தில் சோஷியல் மீடியாக்கள் இல்லை. இந்த காலத்தில் சோசியல் மீடியாக்களில் எதை எடுத்தாலும் அதை ட்ரோல் செய்து விடுகிறார்கள். சமீபத்தில் கூட ஒரு நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன். அந்த நிகழ்ச்சியில் நடிகை தேவயானியும் கலந்து கொண்டார். தேவயானி எனக்கு நல்ல நண்பர். நாங்கள் இருவரும் ஒரே வயது உடையவர்கள். நாங்கள் ஒரே சமயத்தில் தான் திரைத்துரைக்கு வந்தோம். தேவயானியின் மிகப்பெரிய ஃபேன் நான்.
யாருடனும் ஒப்பிட்டுப் பேசாதீர்கள் - வனிதா வேண்டுகோள்
அந்தப் படத்தில் முக்கிய கதாநாயகி என்பதால் தேவயானி மற்றவர்களுக்கு மரியாதை கொடுக்கும் விதமாக எனக்குப் பின்னால் நின்று கொண்டிருந்தார். நான் அவரை அழைத்து என் பக்கத்தில் அமருமாறு கூறினேன். அவர் வேண்டாம் நான் நிற்கிறேன் என மறுத்தார். நீ இப்படி நின்று கொண்டிருந்தால் பலரும் என்னை கமெண்ட்களில் திட்டுவார்கள் எனவே என் பக்கத்தில் வந்து அமர்ந்து கொள் என்று கூறினேன். அவரும் என் பின்னால் வந்து அமர்ந்து கொண்டார். ஆனால் சமூக வலைதளங்களில் “தேவயானி முன்பு திமிராக அமர்ந்திருந்த வனிதா” என்று கமெண்டுகளில் எழுதுகிறார்கள். அவருக்கும், எனக்கும் இருக்கும் நட்பு குறித்து உங்களுக்கு தெரியுமா? அதன் பின்னர் நான் தேவயானிப் பற்றி என்ன பேசினேன் என்பதை யாவது பார்த்தீர்களா? எங்கள் இருவரையும் ஒப்பிட்டு பேசாதீர்கள். தேவயானி வேறு. நான் வேறு அதேபோல் என் மகளையும் தேவயானி மகளையும் ஒப்பீடு செய்து வெளியிடுகிறார்கள்.
கமெண்ட் போடும் வாய்ப்பை உருவாக்குகிறோம்
என் மகள் என்று கிடையாது. யாரும் யாரையும் ஒப்பிட்டுப் பேசக்கூடாது. அதற்கு யாருக்கும் உரிமை இல்லை. என் மகளாகவே இருந்தாலும் நான் ஜோவிகாவை யாருடனும் ஒப்பிட்டு பேசுவது கிடையாது. அந்த காலத்தில் ஜோதிகா இடுப்பைக் காட்டி நடித்தால் அனைவரும் அந்த படத்தை கொண்டாடுகிறார்கள். தற்போது என் மகள் ஜோவிகாவின் இடுப்பிலேயே கேமராவை வைத்து புகைப்படம் எடுத்து அதை ட்ரெண்டாக்குகிறார்கள். விமர்சனமும் செய்கிறார்கள். அதை நான் தவறாக சொல்லவில்லை. அவர் அழகாக இருக்கிறார். அதனால் இவ்வாறு செய்கிறார்கள். ஆனால் இவர்களுக்கெல்லாம் நான் ஒன்றை மட்டும் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நீங்கள் எல்லாம் கமெண்ட் எழுதும் இடத்தில் இருக்கிறீர்கள். நாங்கள் அந்த கமெண்ட்டை உருவாக்கும் இடத்தில் இருக்கிறோம்” எனப் பேசினார்.
