Asianet News TamilAsianet News Tamil

ஆரம்பமே இப்படியா? தனுஷின் 'வாத்தி' விநியோக உரிமை குறித்து வெளியான வதந்தியும்... உண்மையும்..!

தனுஷின் வாத்தி படம் விநியோக உரிமை குறித்து பல்வேறு சர்ச்சைகள் நிலவி வந்த நிலையில் இதற்க்கு விளக்கம் கொடுக்கும் விதமாக தற்போது வெளியாகியுள்ள தகவல் இதோ.. 
 

vaathi movie distribution rights issue news
Author
First Published Dec 20, 2022, 9:34 PM IST

தனுஷ் நடிப்பில் வெளிவந்த  ''திருச்சிற்றம்பலம்''  திரைப்படம் தமிழகம் முழுவதும் வசூலில் புதிய சாதனையை நிகழ்த்தியது.   கலைப்புலி தாணு தயாரிப்பில் வெளிவந்த  "நானே வருவேன்"   திரைப்படம் தரமான படம் என்ற பெயரை எடுத்த போதிலும், 'பொன்னியின் செல்வனின்' தேவராளனின் ஆட்டத்திற்கு முன் சரணடைய நேர்ந்தது. இருப்பினும் அந்த படம் தமிழகம் முழுவதும் 13 கோடி வசூல் செய்தது. இதுவும் ஒரு சாதனையாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் தனுஷ் நடிப்பில் அடுத்ததாக வெளிவர இருக்கும் படம் " வாத்தி ". தெலுங்கு தயாரிப்பாளர் வம்சி தயாரிப்பில் பெரும் பொருட்செலவில் உருவாகி வரும் இந்த படத்தின் " வா...வாத்தி " பாடல் இளைஞர்களால் கொண்டாடப்படுகிறது. பெரும் எதிர்பார்ப்பில் உள்ள இந்த திரைப்படத்தின் விநியோக உரிமை சென்னையில் உள்ள சில மீடியேட்டர்களின் தவறான செயல்பாடுகளால் சிக்கலுக்குள்ளாகி இருக்கிறது.

vaathi movie distribution rights issue news

40 ஆண்டுகளுக்கு பின் கசின் சிஸ்டரை கண்டுபித்த நடிகை வனிதா விஜயகுமார்? நடிகையுடன் போட்ட பதிவு வைரல்!

வாத்தி  திரைபடம் டிசம்பர் - 2ம் தேதி வெளியாகும் என படநிறுவனம் செப்டம்பர் - 19ம் தேதி தங்களுடைய சமூகவலைத்தள பக்கங்களில் அறிவித்தது. படத்தை வாங்க ஆர்வம் காட்டிய விநியோகஸ்தர்களிடமும் டிசம்பர் - 2ம் தேதி உறுதியாக படம் வெளிவரும் என சொல்லப்பட்டது. இதனை நம்பிய “ ஆரண்யா சினி கம்பைன்ஸ் “ என்ற நிறுவனம் சிட்டி, என்.எஸ்.சி நீங்கலாக 5 ஏரியாக்களுக்கு  விநியோக உரிமையை கேட்டது. இதற்கான விலை ரூ.8 கோடி என பேசி முடிக்கப்பட்டு ரூ.3 கோடி முன்பணம் அக்டோபர் - 18ம் தேதி வழங்கப்பட்டது. அக்டோபர் - 24ம் தேதி தீபாவளி என்பதால், தீபாவளிக்கு பிறகு ஒப்பந்தம் செய்து கொள்ளலாம் என தயாரிப்பாளர் தரப்பு கூறியதை விநியோக நிறுவனம் ஏற்றுக்கொண்டது. ஆனால் சொன்னபடி தயாரிப்பு நிறுவனம் தீபாவளி முடிந்து, இருவாரங்கள் கடந்தும் ஒப்பந்தத்தை தரவில்லை என கூறப்படுகிறது.

பின்னர் விநியோக நிறுவனம் கொடுத்த அழுத்தம் காரணமாக நவம்பர் - 6ம் தேதி ஒப்பந்தத்தின் மாதிரியை அனுப்பிய தயாரிப்பு நிறுவனம், படம் ஏப்ரல் அல்லது பிப்ரவரி மாதம் வெளியாகும் என அந்தர் பல்டி அடித்தது. உடனடியாக மறுப்பு தெரிவித்த விநியோக நிறுவனம், கவர்ச்சிகரமான வட்டி அடிப்படையில் பணம் கடனாக பெறப்பட்டு முன்பணம் அனுப்பப்பட்டுள்ளதால் பல மாதங்கள் காத்திருக்க இயலாது என்றும், சொன்னபடி டிசம்பர் - 2ம் தேதி படத்தை வெளியிடவேண்டும் என்றும், இல்லையென்றால் முன் பணத்தை உடனடியாக  திருப்பித்தர வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தது.

vaathi movie distribution rights issue news

Samantha: மயோசிட்டிஸ் பிரச்சனையால்... கனவு வாய்ப்புகளை இழந்த நடிகை சமந்தா? அதிர்ச்சியில் ரசிகர்கள்!

படத்தை டிசம்பர் - 2ம் தேதி வெளியிட தயாரிப்பாளர் விரும்பாததால் முன்பணத்தை உடனே திருப்பித் தந்துவிடுவதாகவும், வட்டி எதுவும் தர முடியாது எனவும் தெரிவித்தது தயாரிப்பு நிறுவனம். இதனை ஏற்று கொண்ட விநியோக நிறுவனம் உடனடியாக பணத்தை கொடுத்தால் வட்டி எதுவும் தேவையில்லை என தெரிவித்தது. ஆனால் சொன்னபடி நவம்பர் - 6ம் தேதி பணத்தை தராமல்  நவம்பர் - 23ம் தேதி ரூ.2 கோடி மட்டும் கொடுத்துவிட்டு, இரண்டு நாட்களில் மீதி ரூ.1 கோடியை தருவதாக தயாரிப்பு நிறுவனம் உத்திரவாதம் அளித்தது. அதனையும் விநியோகம் ஏற்றுகொண்ட நிலையில் சொன்னபடி நவம்பர் - 26ம் தேதி ரூ.1 கோடி பணத்தை  திரும்ப தரவில்லை என்பதால் மன உளைச்சலுக்கு உள்ளானது விநியோக நிறுவனம்.  

இந்நிலையில் படம் பிப்ரவரி - 17ம் தேதி வெளியாகும் என அதிகாரபூர்வமாக தயாரிப்பு நிறுவனம் அறிவிப்பு வெளியிட்டதால், வட்டி இழப்பை ஈடுகட்டும் பொருட்டு பேசிய விலைக்கே படத்தை விநியோகம் செய்வதாகவும், ரூ.1 கோடி பணத்தை முன்பணமாக வைத்து கொள்ளுமாறும் மீதி தொகை ரூ.7 கோடியை பட வெளியீட்டிற்கு ஒரு வாரத்திற்கு முன்பு தருவதாகவும் விநியோக நிறுவனம் தயாரிப்பாளர்க்கு கடிதம் அனுப்பியது. அந்த கடிதத்திற்கு பதில் வராததாலும், ரூ.1 கோடி பணத்தையும் தராததாலும் விநியோக நிறுவனம் டிசம்பர் - 8ம் தேதி சென்னை உயர்நிதிமன்றத்தை அணுகி காப்புரிமை சட்டப்படி தங்களது முன்பணம் தயாரிப்பாளர் வசம் உள்ளதால் படத்தின் உரிமை தங்களுக்கே சொந்தம் என்றும், பேசிய தொகையில் மீதமுள்ள ரூ.7 கோடியை பட வெளியீட்டிற்கு இரண்டு வாரங்களுக்கு முன் நீதிமன்றத்தில் செலுத்துவதாகவும் தெரிவித்துள்ளது.

vaathi movie distribution rights issue news

இந்த கோரிக்கையை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் தயாரிப்பாளர் தரப்பை டிசம்பர் - 15ம் தேதி ஆஜராகுமாறு கூறியது. ஆனால் தயாரிப்பு நிறுவனமோ நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. இதனையடுத்து வழக்கை டிசம்பர் - 21ம் தேதிக்கு தள்ளி வைத்த நீதிமன்றம் உரிய உத்தரவை பிறப்பிக்கும் என கூறப்படுகிறது. காப்புரிமை சட்டப்படி தற்போதைய நிலையில் ஐந்து ஏரியா விநியோக உரிமை “ ஆரண்யா சினி கம்பைன்ஸ் ” வசம் உள்ளதால் மீடியேட்டர்களின் பேச்சை கேட்டு விநியோகஸ்தர்கள் யாரும் ஏமாறவேண்டாம் என விநியோக நிறுவன தரப்பு தெரிவித்துள்ளது.

Follow Us:
Download App:
  • android
  • ios